அதிபர் மற்றும் பிரதமர் மாற்றப்படுவார்கள் என்ற தகவலில் உண்மை இல்லை: பாகிஸ்தான் ராணுவத் தளபதி

பாகிஸ்தான் அதிபர் மற்றும் பிரதமர் மாற்றப்படுவார்கள் என வெளிவரும் தகவல்கள் தவறானவை என்று அந்நாட்டு ராணுவத் தளபதி அசிம் முனிர் தெரிவித்துள்ளார். மேலும், அவர் எந்தப் பதவியிலும் ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறியுள்ளார்.

இந்தியாவின் “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கைக்குப் பின்னர் பாகிஸ்தானின் அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. அதற்குப் பிறகு ராணுவத் தளபதி அசிம் முனிர் அமெரிக்காவிற்கு சென்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடன் கலந்துரையாடினார். சில வாரங்களுக்கு பின்னர் மீண்டும் அமெரிக்கா சென்றார்.

இந்தச் சம்பவம் பாகிஸ்தானில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் விவாதத்தை உருவாக்கியது. ஏற்கனவே அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் அசிம் முனிர் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக செய்திகள் வந்தன. இப்போது பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடனும் அவருக்குள் முரண்பாடு நிலவுகிறது என்று கூறப்படுகிறது. இதனிடையே பாகிஸ்தானில் அதிபர் மற்றும் பிரதமரை மாற்றும் முயற்சிகள் நடைபெறுகின்றன என்றும், ராணுவ ஆட்சி மீண்டும் உருவாகும் வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன.

ஆனால், இத்தகைய செய்திகளை அசிம் முனிர் திட்டவட்டமாக மறுத்ததாக பாகிஸ்தானின் ஜாங் நாளிதழின் எழுத்தாளர் சுஹைல் வாராய்ச் குறிப்பிட்டுள்ளார். தனது கட்டுரையில் அவர் எழுதியதாவது:

“அமெரிக்கா சென்றபோது அசிம் முனிர் பெல்ஜியத்திற்கும் பயணம் மேற்கொண்டார். பிரஸ்ஸல்ஸ் மாநாட்டில் பேசிய அவர், ‘கடவுள் என்னை நாட்டின் பாதுகாவலராக ஆக்கியுள்ளார். அதற்கு அப்பாற்பட்ட எந்தப் பதவியையும் நான் விரும்பவில்லை. நான் ஒரு ராணுவ வீரன். எனது மிகப்பெரிய கனவு நாட்டிற்காக உயிர் தியாகம் செய்வதே’ என்றார்.

பிரஸ்ஸல்ஸில் நடந்த கூட்டத்துக்கு அப்பாலும், என்னுடன் தனிப்பட்ட முறையில் சுமார் இரண்டு மணி நேரம் பேசினார். அப்போது கூட அதிபர் மற்றும் பிரதமர் மாற்றம் குறித்த வதந்திகளை அவர் கடுமையாக மறுத்தார். அத்தகைய தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்றும், நாட்டின் அரசியல் நிலையை பாதிக்க திட்டமிட்டு பரப்பப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் குறித்து பேசும்போது, ‘பாகிஸ்தானின் அமைதியை சிதைக்க இந்தியா பினாமிகளைப் பயன்படுத்துகிறது. பல ஆண்டுகளாக ஆப்கானியர்களுக்கு நாங்கள் உதவி செய்தோம், ஆனால் அவர்கள் இந்தியாவுடன் சேர்ந்து எங்களை எதிர்த்து சதி செய்கின்றனர்’ என்றார்.

மேலும் அவர், ‘பாகிஸ்தானில் அரிய கனிமங்கள் உள்ளன. அவற்றை பயன்படுத்தி நாட்டின் கடனை குறைக்க முடியும். அடுத்த ஆண்டு தொடங்கும் ரெக்கோ டிக் சுரங்கத் திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் குறைந்தது 2 பில்லியன் டாலர் நிகர வருவாய் கிடைக்கும். அது தொடர்ந்து அதிகரிக்கும். அமெரிக்கா மற்றும் சீனா இடையே நாங்கள் சமநிலையை கடைப்பிடிப்போம். ஒருவருக்காக மற்றொருவரை விட்டுவிட மாட்டோம்’ எனத் தெரிவித்தார்” என்று கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Facebook Comments Box