வர்த்தக பற்றாக்குறையை சீக்கிரம் குறைக்க ரஷ்யாவிடம் இந்தியா வலியுறுத்தல்

இந்தியா–ரஷ்யா இடையேயான வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும், வர்த்தக பற்றாக்குறையை உடனடியாகக் குறைக்க வேண்டும் என்றும், 2030-க்குள் 100 பில்லியன் டாலர் வர்த்தக இலக்கை அடைய வேண்டும் என்றும் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா–ரஷ்யா அரசுகளுக்கிடையேயான வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம், கலாச்சார ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணையத்தின் 26-வது கூட்டம் மாஸ்கோவில் நடைபெற்றது. இதில், ரஷ்யாவின் முதல் துணை பிரதமர் டெனிஸ் மான்டுரோவ் தலைமையிலான குழுவும், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையிலான குழுவும் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.

அமெரிக்கா இந்தியப் பொருட்களுக்கு 50% இறக்குமதி வரி விதித்ததைத் தொடர்ந்து, பிற நாடுகளுடனான வர்த்தகத்தை விரிவுபடுத்தும் முயற்சியை மத்திய அரசு வலுப்படுத்தி வருகிறது. இந்த சூழலில், மாஸ்கோவில் உரையாற்றிய ஜெய்சங்கர், “இந்தியா–ரஷ்யா உறவு தொடர்ந்து வலிமையாகி வருகிறது. 2021-இல் 13 பில்லியன் டாலராக இருந்த இருதரப்பு வர்த்தகம், 2024–25-ல் 68 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

ஆனால், அதே சமயம் வர்த்தக பற்றாக்குறையும் மிக அதிகமாக வளர்ந்துள்ளது. 2021-இல் 6.6 பில்லியன் டாலராக இருந்த பற்றாக்குறை, தற்போது 59 பில்லியன் டாலர் அளவுக்கு சென்றுள்ளது. இதை உடனடியாக சரிசெய்ய வேண்டியது அவசியம்.

இந்தியா அதிக வர்த்தக வாய்ப்புகளைப் பெற ரஷ்யா தனது சந்தையை விரிவுபடுத்த வேண்டும். அதிக வர்த்தகத்தில் ஈடுபடுவதும், அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதும் நம் நோக்கமாக இருக்க வேண்டும். 2030-க்குள் 100 பில்லியன் டாலர் இலக்கை அடைய விரைவாக முன்னேற வேண்டும்.

இத்துடன், கட்டணத் தடைகள், கட்டணமில்லா தடைகள், தளவாடங்களில் உள்ள சிக்கல்கள் ஆகியவற்றை நீக்க வேண்டும். வடக்கு–தெற்கு போக்குவரத்து வழித்தடமும், சென்னை–விளாடிவோஸ்டாக் கடற்பாதையும் வலுவடைய வேண்டும். பரிவர்த்தனைகளுக்கான எளிய கட்டண முறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.

Facebook Comments Box