அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – ஜெலன்ஸ்கி இன்று சந்திப்பு
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வாஷிங்டனில் இன்று சந்தித்து பேசுகிறார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம், ஆங்கரேஜ் நகரில் நேற்று முன்தினம் சந்தித்து பேசியனர்.
அப்போது ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரை நிறுத்துவது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் ட்ரம்பை வாஷிங்டனில் இன்று சந்தித்து பேசுகிறார். ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வோன் டெர் லியென், ஜெர்மனி பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ், பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இத்தாலி பிரதமர் மெலோனி ஆகியோர் ஜெலன்ஸ்கியோடு இணைந்து அதிபர் ட்ரம்பை சந்திக்க உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து உக்ரைன் வட்டாரங்கள் தெரிவித்ததாவது: உக்ரைனின் டோன்ஸ்க் பகுதியில் சுமார் 70 சதவீத நிலப்பரப்பை ரஷ்யா கைப்பற்றி உள்ளது. அந்த பிராந்தியம் முழுவதையும் ரஷ்யா சொந்தமாக கொண்டாடுகிறது. போரை நிறுத்த டோன்ஸ்க் பகுதியை முழுமையாக ரஷ்யாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அதிபர் புதின் கூறியுள்ளார். இதற்கு ஈடாக, ரஷ்யா வசம் உள்ள மிகச் சிறிய பகுதியை உக்ரைனுக்கு வழங்க அவர் முன்வந்துள்ளார்.
ராணுவ ரீதியாக டோன்ஸ்க் பகுதி மிகவும் முக்கியம். இந்த பகுதியில் அரிய வகை தனிமங்கள் மற்றும் இயற்கை வளங்கள் நிறைந்துள்ளன. எனவே, டோன்ஸ்க் பகுதியை விட்டுக் கொடுக்க முடியாது. உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் ஒருங்கிணைந்துள்ளன. ஆகவே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியோடு இணைந்து ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்து பேச உள்ளனர்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணையக்கூடாது என்று அதிபர் புதின் நிபந்தனை விதித்துள்ளார். இது ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனை. இதுபற்றி அதிபர் ட்ரம்புடன் விரிவாக விவாதிக்கப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.