‘கிரிமியாவையும் நேட்டோவையும் மறந்துவிடுங்கள்’ – ஜெலன்ஸ்கிக்கு ட்ரம்ப்பின் ‘செக்’… அடுத்தது என்ன?

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யாவிடமிருந்து கிரிமியாவை மீட்டெடுப்பது மற்றும் நேட்டோவில் உறுப்பினராக சேருவது போன்ற எண்ணங்களை கைவிட்டுவிட்டால், போர் உடனடியாக நிறுத்தப்படலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அலாஸ்கா மாநிலம், ஆங்கரேஜ் நகரில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் ரஷ்ய அதிபர் புதினும் சந்தித்து, ரஷ்யா – உக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி வைப்பது குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். இதனைத் தொடர்ந்து, இன்று வாஷிங்டனில், ட்ரம்ப்பை சந்திக்க உள்ளார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. இந்தச் சந்திப்பிற்கு முன்பே, “கிரிமியா, நேட்டோ குறித்த எண்ணங்களை கைவிட்டால் போரை உடனடியாக முடிக்கலாம்” என்று ஜெலன்ஸ்கிக்குச் செக் வைத்துள்ளார் ட்ரம்ப்.

கிரிமியாவின் முக்கியத்துவம்

1991-ல் சோவியத் யூனியன் சிதறியபோது உருவான நாடு உக்ரைன். அதனுடன் எல்லை பகுதியை பகிர்ந்த கிரிமியா, இன ரீதியாக ரஷ்யர்களின் ஆக்கிரமிப்பு அதிகம் கொண்டது. இதனால் உக்ரைனர்களுக்கும் ரஷ்ய இனத்தவருக்கும் இடையே நீண்டகாலமாக பதற்றம் நிலவியது.

2014-ஆம் ஆண்டு, அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, ரஷ்யா கிரிமியாவை தன்னுடன் இணைத்துக் கொண்டது. இது உக்ரைனுக்கு கடும் அதிர்ச்சியாக இருந்தது. எண்ணெய், எரிவாயு வளங்கள் நிறைந்ததும், முக்கிய சுற்றுலாத் தலமாகவும் விளங்குவதால், கிரிமியா மிகுந்த மதிப்புடையது. கருங்கடலில் தனது ராணுவ வலிமையை நிலைநிறுத்த ரஷ்யா கிரிமியாவை அடிப்படையாகக் கொண்டது. இதன் மூலம், இயற்கை வளங்கள், ராணுவ ஆதிக்கம், சுற்றுலா வருவாய் என மூன்று துறைகளில் உக்ரைன் பெரும் இழப்பைச் சந்தித்தது.

கிரிமியாவை ரஷ்யாவுடன் நேரடியாக இணைக்கும் 19 கி.மீ நீளப் பாலம், 2022-இல் உக்ரைன் தாக்குதலுக்குள்ளானாலும், ரஷ்யா உடனடியாக சீரமைத்தது. இது கிரிமியாவுக்கான ரஷ்யாவின் உறுதியை வெளிப்படுத்தியது.

ட்ரம்ப்பின் நிலைப்பாடு

இந்தச் சூழலில், “கிரிமியாவை ரஷ்யாவிற்கு ஒப்படைத்ததை மாற்ற முடியாது. நேட்டோவில் உக்ரைனை சேர்க்கக்கூடாது. சில விஷயங்கள் ஒருபோதும் மாறாது. ஜெலன்ஸ்கி விரும்பினால் போரை உடனடியாக முடிக்கலாம். இல்லை என்றால் தொடர்ந்து போராடலாம்” என்று தனது ‘ட்ரூத் சோஷியல்’ வலைதளத்தில் ட்ரம்ப் பதிவிட்டார்.

ஜெலன்ஸ்கியின் பதில்

உடனடியாக எதிர்வினையாற்றிய ஜெலன்ஸ்கி, “கிரிமியாவை ரஷ்யாவுக்கு தாரை வார்த்த சலுகைகள், புதினுக்கு மேலும் வலிமை தந்தன. அதனால், டான்பாஸ் உள்ளிட்ட கிழக்கு பகுதிகளை இழந்தோம். எங்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் பலிக்கவில்லை. ஆனால், நாங்கள் எங்கள் சுதந்திரத்திற்காகவே போராடுகிறோம். கீவ், ஒடேஸா, கார்கிவ் போன்ற பகுதிகள் ரஷ்யாவிடம் செல்லாமல் தடுக்கத்தான் எங்கள் போராட்டம்,” எனக் குறிப்பிட்டார்.

நேட்டோ – ரஷ்யா மோதல்

1949-இல் உருவான நேட்டோ (வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு), அதன் உறுப்பினர் நாடுகள் மீது தாக்குதல் நடந்தால், அனைத்தும் ஒன்றுபட்டு எதிர்க்கும் இராணுவ கூட்டமைப்பாகும். உக்ரைனை அதில் சேர்க்கும்போது, அமெரிக்காவின் தாக்கம் ரஷ்ய எல்லையில் அதிகரிக்கும் என்ற அச்சத்தால் ரஷ்யா கடுமையாக எதிர்க்கிறது. இது தான் ரஷ்யா – உக்ரைன் போரின் முக்கிய காரணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

அடுத்தது என்ன?

ட்ரம்ப்பின் கருத்து, ரஷ்யாவுக்கான ஆதரவாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், உக்ரைன் அதனை ஏற்க வாய்ப்பு இல்லை. அதேசமயம் நேட்டோ உறுப்பு நாடுகள் சிலவும் ட்ரம்ப்பின் திடீர் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. எனவே, இன்றைய சந்திப்புக்குப் பிறகு நிலைமை எவ்வாறு மாறும் என்பது கவனிக்கத்தக்கதாக உள்ளது.

Facebook Comments Box