அமெரிக்கருக்கு ரூ.19 லட்சம் பைக்கை பரிசளித்த புதின்

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் ரஷ்ய எல்லையில் இருந்து 80 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் இது ரஷ்யாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது. 1867-ஆம் ஆண்டில் ரஷ்யாவில் ஜார் மன்னர் ஆட்சி நடக்கும் போது அலாஸ்கா அமெரிக்காவுக்கு ரூ.45 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று கூட அலாஸ்காவில் ரஷ்ய கலாச்சாரம் எங்கேயும் காணப்படுகிறது.

கடந்த 15-ஆம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அலாஸ்கா மாகாணம், ஆங்கரேஜ் ராணுவ தளத்தில் சந்தித்து பேசினர். அந்த சந்திப்பில், ரஷ்ய அதிபர் புதின் அமெரிக்காவின் அலாஸ்காவை சேர்ந்த மார்க் வாரனுக்கு ரூ.19 லட்சம் மதிப்புள்ள யூரல் பைக்கை பரிசாக வழங்கினார்.

இதுகுறித்து மார்க் வாரன் கூறியதாவது: “நான் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாண தீயணைப்பு படையில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். ரஷ்ய தயாரிப்பான யூரல் பைக்கின் தீவிர ரசிகன் நான், பழைய யூரல் பைக்கை வாங்கி ஓட்டி வந்தேன்.”

அதிபர் புதினின் வருகைக்காக ரஷ்ய ஊடகங்களின் செய்தியாளர்கள் ஆங்கரேஜ் நகரில் முகாமிட்டிருந்தனர். யூரல் பைக்கில் சென்ற போது அவர்கள் என்னிடம் பேட்டி எடுத்தனர். அப்போது யூரல் பைக்கின் உதிரிப் பாகங்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்படுவதாக ரஷ்ய செய்தியாளர்களிடம் தெரிவித்தேன்.

என் பேட்டி ரஷ்ய அதிபர் புதினின் கவனத்திற்கு சென்றிருக்கும். அதனால் அவர் எனக்கு புதிய யூரல் பைக்கை பரிசாக வழங்கியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு ஆங்கரேஜ் நகரில் ரஷ்ய அதிகாரிகள் எனக்கு புதிய யூரல் பைக்கை வழங்கினர். இதற்காக ஒரு பைசாவும் பெறவில்லை. இது எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் இருந்தது,” என்று மார்க் வாரன் தெரிவித்தார்.

Facebook Comments Box