தாய்லாந்து – கம்போடியா இடையேயான போர் தீவிரமடைந்தது
தாய்லாந்து, கம்போடியா இடையிலான சண்டை நாளுக்கு நாள் கடுமையாகி வருகிறது. இந்த மோதலில் இதுவரை இருதரப்பினரும் சேர்த்து 33 பேர் உயிரிழந்துள்ளனர்.
தென்கிழக்கு ஆசியாவில் உள்ள தாய்லாந்தின் அண்டை நாடு கம்போடியா. இரு நாடுகளும் 817 கி.மீ. நீள எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. பண்டைய காலத்தில் முதலாம் ராமா மன்னர் ஆட்சி செய்த ரத்தனகோசின் பேரரசே தாய்லாந்தின் அடித்தளம். அதேபோல் இரண்டாம் ஜெயவர்மன் மன்னர் நிறுவிய கெமர் பேரரசே கம்போடியாவை ஆண்டது. இந்து மதத்தை பின்பற்றிய இரு பேரரசுகளும் தங்கள் ஆட்சிக் காலங்களில் ஏராளமான இந்துக் கோவில்களை கட்டியிருந்தன. தற்போதைய நிலையில் அந்த கோவில்களின் உரிமை தொடர்பான சிக்கல் இரு நாடுகளுக்கும் இடையில் கிளர்ச்சி ஏற்படுத்தி, போராக மாறியுள்ளது.
கம்போடியா – தாய்லாந்து எல்லையில் உள்ள டாங்கிரெக் மலையில் அமைந்த பிரியா விகார் சிவன் கோயிலை இரு நாடுகளும் தங்கள் சொந்தம் எனக் கூறின. இதற்காக 1959-ஆம் ஆண்டு சர்வதேச நீதிமன்றத்தை நாடினர். பின்னர் 1962-இல் சர்வதேச நீதிமன்றம், அந்த கோவில் கம்போடியாவுக்கே சொந்தமானது எனத் தீர்ப்பளித்தது. ஆனால் தாய்லாந்து இதை ஏற்க மறுத்து, கோவில் தங்களுக்கு சொந்தம் என்றே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
தாய்லாந்தின் எல்லைக்குள் தா முயென் தாம், தா முயென் டோட், தா குவாய் என்ற மூன்று இந்துக் கோவில்கள் உள்ளன. இவை 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. ஆனால் இவையும் கம்போடியா தங்களுடையவை என்று தெரிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி தா முயென் தாம் கோவில் வளாகம் அருகே கம்போடிய ராணுவ ட்ரோன்கள் பறந்ததாகவும், ராணுவத்தினர் முன்னேறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை வெடித்தது. பீரங்கி தாக்குதலும் இடம்பெற்றது.
அடுத்து 25ஆம் தேதி எல்லைப்பகுதியில் 12க்கும் மேற்பட்ட இடங்களில் சண்டை வெடித்தது. தாய்லாந்து, கம்போடியாவின் ஏழு பகுதிகளில் குண்டுவீச்சு நடத்தியது. இதில் பலர் காயமடைந்தனர். தொடர்ந்து மூன்றாவது நாளாக போர் கடுமையாகத் தொடர்ந்து வருகிறது.
மூன்று நாட்களில் தாய்லாந்தில் 6 ராணுவத்தினர், 14 பொதுமக்கள் என மொத்தம் 20 பேர் உயிரிழந்துள்ளனர். கம்போடியாவில் 5 ராணுவத்தினர், 8 பொதுமக்கள் என மொத்தம் 13 பேர் இறந்துள்ளனர். இதுவரை இரு நாடுகளிலும் 33 பேர் பலியாகி, நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். எல்லைப்பகுதி மக்கள் லட்சக்கணக்கில் இடம்பெயர்ந்துள்ளனர்.
ஐ.நா. அவசரக் கூட்டம்: இந்த நிலைமையைக் குறித்து ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் நியூயார்க் நகரில் அவசரக் கூட்டம் நடத்தியது. ஆனால் அதில் எந்தத் தீர்மானமும் எட்டப்படவில்லை. மலேசியாவின் சமரசத்தால் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும், தாய்லாந்து அதைக் கைக்கொள்ளவில்லை என கம்போடியா குற்றம் சாட்டுகிறது. இதனால் போர் மேலும் மோசமடைந்து வருகிறது.
அமெரிக்கா – சீனாவின் மறைமுகப் போர்: சர்வதேச பாதுகாப்பு வல்லுநர்கள் கூறுவதாவது – தாய்லாந்து அமெரிக்காவின் ஆதரவைப் பெற்ற நாடு. கம்போடியா சீனாவின் ஆதரவைப் பெற்றது. தாய்லாந்தின் ராணுவ பலம் மிகுந்தது. அமெரிக்க தயாரிப்பு எப்-16 விமானங்கள் உட்பட பல அதிநவீன ஆயுதங்கள் தாய்லாந்திடம் உள்ளன. ஆனால் கம்போடியாவுக்கு போர் விமானங்கள் இல்லை. சீன ட்ரோன்கள், சீன – ரஷ்ய பீரங்கிகள் உள்ளிட்டவற்றையே பயன்படுத்துகிறது.
மேலும் சீன ராணுவம் கம்போடியாவின் சிகனுவோக்வில்லே கடற்படை தளத்தை மேம்படுத்தி வருகிறது. அங்கு சீன போர்க்கப்பல்கள் உள்ளன. அங்கோர் மற்றும் பினாம்பென் விமான நிலையங்களையும் சீன நிறுவனங்கள் புதுப்பித்துள்ளன. அவற்றை சீன ராணுவம் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இதனால் தாய்லாந்து – கம்போடியா இடையிலான மோதல், உண்மையில் அமெரிக்கா – சீனாவுக்கிடையிலான மறைமுகப் போராகவே பார்க்கப்படுகிறது என வல்லுநர்கள் கூறுகின்றனர்.