இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கைது – பின்னணி விளக்கம்
அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதாகும் குற்றச்சாட்டின் பேரில், இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே (76) நேற்று கைது செய்யப்பட்டார்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து மக்களின் போராட்டம் வெடித்ததால், அதிபர் கோத்தபய ராஜபக்ச 2022 ஜூலையில் பதவி விலகினார். அதன் பிறகு மீதமிருந்த பதவிக் காலத்திற்காக ரணில் அதிபராக பொறுப்பேற்றார். அவர் 2024 செப்டம்பர் வரை அதிபராக இருந்ததோடு, 5 முறை இலங்கை பிரதமராகவும் இருந்தவர்.
இந்நிலையில், ரணில் அதிபராக இருந்த காலத்தில், தனிப்பட்ட வெளிநாட்டு பயணத்துக்காக அரசுப் பணத்தை பயன்படுத்தியதாக குற்றப்புலனாய்வு துறை (சிஐடி) போலீசார் குற்றம் சாட்டினர். 2023 செப்டம்பரில் தனது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கேவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள அவர் இங்கிலாந்து சென்றார். இதற்கான செலவில் அரசுப் பணம் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அவரை விரைவில் கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
ரணில், 2023-ல் கியூபாவின் ஹவானாவில் நடைபெற்ற ஜி77 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். அதன்பின் இலங்கைக்கு திரும்பும் வழியில் இங்கிலாந்து சென்றார். அப்போது தனது மனைவியுடன் லண்டனில் தங்கி, வால்வர்ஹாம்டன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார். மனைவியின் பயணச் செலவுகளை தானே ஏற்றுக்கொண்டதாகவும், அரசுப் பணத்தை பயன்படுத்தவில்லை என்றும் ரணில் தொடர்ந்து விளக்கமளித்திருந்தார்.
ஆனால், தனிப்பட்ட பயணத்துக்காக அரசுப் பணத்தை பயன்படுத்தியதோடு, அவரது பாதுகாவலர்களுக்கும் அரசே சம்பளம் வழங்கியதாக சிஐடி குற்றம் சாட்டியுள்ளது. இந்த குற்றச்சாட்டின் பேரில்தான் ரணில் விக்ரமசிங்கே தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.