‘மேற்கு ஆசியாவில் முதல்முறை: காசாவில் உணவுப் பஞ்சம்’ – ஐ.நா அறிக்கை
மேற்கு ஆசியா பிராந்தியத்தில் முதல்முறையாக பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் கடுமையான உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. அங்கு சுமார் 5 லட்சம் மக்கள் உணவு தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருவதாக ஐ.நா வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
“காசாவில் ஏற்பட்டுள்ள உணவுப் பஞ்சம் முற்றிலும் தவிர்க்கக்கூடியது. ஆனால், இஸ்ரேல் விதித்த தடைகளால் உணவுப் பொருட்களை அந்தப் பகுதிக்குள் கொண்டு செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது” என்று ஐ.நா நிவாரண உதவி பிரிவு தலைமை அதிகாரி தாமஸ் ஃப்ளட்ச்சர் கூறியுள்ளார்.
ஆனால், இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளது. காசாவில் பஞ்சம் எதுவும் இல்லை; இது ஹமாஸ் அமைப்பு பரப்பும் தவறான தகவலின் விளைவு மட்டுமே என்று இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது.
ஐ.நா தரப்பில் வெளியிடப்பட்ட தகவலின்படி, கடந்த 15ஆம் தேதியிலேயே காசா நகரில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் செப்டம்பர் இறுதிக்குள் டெய்ர்-எல்-பலாஹ் மற்றும் கான் யூனிஸ் பகுதிகளிலும் இதே நிலை உருவாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தற்போது காசாவில், தினமும் ஐந்து வீடுகளில் ஒன்றில் உணவுக் குறைபாடு நிலவுகிறது. மூன்றில் ஒரு குழந்தை பசியால் பாதிக்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு பத்தாயிரம் பேரில் இருவர் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைவால் உயிரிழக்கின்றனர் என ஐபிசி (IPC) அறிக்கை தெரிவித்துள்ளது.
2023 அக்டோபரில் ஹமாஸ் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேல்–ஹமாஸ் மோதல் தீவிரமடைந்தது. கடந்த 22 மாதங்களில் இஸ்ரேல் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையால் பாலஸ்தீனத்தை சேர்ந்த சுமார் 62,192 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.