மேற்கத்திய நாடுகள் குடியேற்ற விதிகளை கடுமையாக்கிய நிலையில் – இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் ரஷ்யா

அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற மேற்கத்திய நாடுகள் வெளிநாட்டினருக்கான குடியேற்ற சட்டங்களை தொடர்ந்து கடுமையாக்கி வருகின்றன. இந்நிலையில், இந்தியர்களை வேலைக்கு அமர்த்துவதில் ரஷ்ய நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.

இதுகுறித்து ரஷ்யாவுக்கான இந்திய தூதர் வினய் குமார் டாஸ் பேட்டியளித்தபோது, “ரஷ்யாவில் மனிதவளம் குறைவாக உள்ளது. ஆனால் இந்தியாவில் திறமை வாய்ந்த பணியாளர்கள் அதிகம் உள்ளனர். எனவே, ரஷ்யாவின் சட்ட, விதிமுறைகளுக்குட்பட்டு அந்நாட்டு நிறுவனங்கள் இந்தியர்களை அதிக அளவில் பணியில் அமர்த்தி வருகின்றன” என்றார்.

முக்கியமாக கட்டுமானத் துறை, ஜவுளி தொழில், இயந்திர உற்பத்தி மற்றும் மின்னணு துறைகளில் இந்தியர்களுக்கான தேவை அதிகரித்து வருவதாகவும், இதனால் தூதரக சேவைகளின் பணிச்சுமை கூடிவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியா–ரஷ்யா உறவு, இந்தியாவின் வெளிநாட்டு கொள்கையின் முக்கியமான தளமாக கருதப்படுகிறது. சமீப காலங்களில் ரஷ்யாவில் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்திய தூதரகத் தரவுகளின்படி, தற்போது ரஷ்யாவில் சுமார் 14,000 இந்தியர்கள் வசிக்கின்றனர். மேலும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 1,500 ஆப்கானியர்களும் அங்கே குடியேறியுள்ளனர்.

மேலும், ரஷ்ய மருத்துவம் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சுமார் 4,500 இந்திய மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களில் 90% பேர் மருத்துவத்துறையிலேயே பயிலும் நிலையில், மற்றவர்கள் பொறியியல், கணினி அறிவியல், போக்குவரத்து தொழில்நுட்பம், நிர்வாகம், வேளாண்மை மற்றும் நிதி மேலாண்மை போன்ற துறைகளில் கல்வி கற்றுவருகின்றனர்.

Facebook Comments Box