வட கொரிய அதிபர் கிம்மை மீண்டும் சந்திக்க விரும்புகிறேன்: டொனால்டு ட்ரம்ப்

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை மீண்டும் சந்திப்பேன் என்று நம்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங் முதன் முறையாக வெள்ளை மாளிகைக்கு நேற்று வருகை தந்தார். அப்போது பேசிய அதிபர் ட்ரம்ப், “ராஜதந்திரத்தை ஆதரிக்கும் முற்போக்கான கொள்கையுடைய தென் கொரிய அதிபர் லீயைப் போலவே, வட கொரியா உறவில் எனது நிலைப்பாடும் உள்ளது.

எனது முதல் பதவிக்காலத்தில் மூன்று முறை கிம் ஜாங் உன்னை சந்தித்தேன். மீண்டும் ஒரு நாள் நான் அவரைப் பார்ப்பேன். அவரை சந்திப்பதற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். அவர் என்னிடம் மிகவும் நன்றாக நடந்துகொண்டார். எனவே அவருடன் இந்த ஆண்டு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று நம்புகிறேன்.

நானும், கிம்மும் எங்கள் சந்திப்புகளின் போது மிக அன்பாக பழகினோம். இது பதற்றங்களைக் குறைத்தது, ஆனால் நீடித்த ஒப்பந்தத்தை உருவாக்க தவறிவிட்டது” என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய தென் கொரிய அதிபர் லீ, “ட்ரம்ப் அமெரிக்காவை அமைதியைக் காக்கும் நாடாக அல்ல, மாறாக அமைதியை உருவாக்கும் நாடாக மாற்றியுள்ளார். அதிபர் ட்ரம்ப், கிம் ஜாங் உன்னுடனான உங்கள் சந்திப்புக்கும், வட கொரியாவில் ட்ரம்ப் டவர் கட்டுவதற்கும், அங்கு நீங்கள் கோல்ஃப் விளையாடுவதற்கும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். கிம்மும் உங்களுக்காக காத்திருப்பார்.

வடகொரியா விரைவில் வருடத்திற்கு 10 முதல் 20 அணு ஆயுதங்களை உற்பத்தி செய்ய முடியும். அழுத்தம் மற்றும் தடைகள் இருந்தபோதிலும் அவர்களால் அமெரிக்காவை தாக்கக்கூடிய ஏவுகணையைகூட உற்பத்தி செய்ய முடியும். கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் வடகொரியா வைத்திருக்கும் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது கடினமான உண்மை” என்றார்.

Facebook Comments Box