“கிரிமியா, நேட்டோவை மறந்து விடுங்கள்” – ஜெலன்ஸ்கிக்கு ட்ரம்ப் வைத்த ‘செக்’… அடுத்தது என்ன?
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, கிரிமியாவை மீண்டும் கைப்பற்றுவது அல்லது நேட்டோவில் சேர்வது போன்ற எண்ணங்களை கைவிட்டுவிட்டால், போர் நிறுத்தம் உடனடியாக சாத்தியமாகும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அலாஸ்கா மாநிலம், ஆங்கரேஜ் நகரில் ட்ரம்ப்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் சந்தித்து, ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துவது குறித்து விரிவாக கலந்துரையாடினர். இதைத் தொடர்ந்து, ட்ரம்ப்பை இன்று வாஷிங்டனில் சந்திக்க உள்ளார் ஜெலன்ஸ்கி. அதற்கு முன்னதாகவே, “கிரிமியா, நேட்டோவை மறந்துவிட்டால் போர் நிறுத்தம் சாத்தியம்” என்று ட்ரம்ப் ஒரு ‘செக்’ வைத்துள்ளார்.
கிரிமியாவின் முக்கியத்துவம்:
1991-இல் சோவியத் யூனியன் சிதைந்தபோது உருவான நாடு உக்ரைன். அதில் கிரிமியா ஒரு தீபகற்பப் பகுதி. அங்கே பெரும்பான்மையாக ரஷ்யர்கள் வாழ்ந்ததால், ரஷ்ய மற்றும் உக்ரைன் இனக்குழுக்களுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டன. ரஷ்யா தொடர்ந்து கிரிமியா தமக்குரியது எனக் கூறி வந்த நிலையில், 2014-ஆம் ஆண்டு அதனை இணைத்துக்கொண்டது.
கிரிமியாவில் எண்ணெய், இயற்கை எரிவாயு வளங்கள் அதிகமாக உள்ளன. கூடவே, அது ஒரு முக்கிய சுற்றுலா மையமும் ஆகும். இதனால் கருங்கடலில் ராணுவத் தளத்தை வலுப்படுத்திய ரஷ்யாவுக்கு பெரும் ஆதாயம் கிடைத்தது. இயற்கை வளங்கள், ராணுவ முக்கியத்துவம், சுற்றுலா வருமானம் – மூன்றையும் இழந்தது உக்ரைன். எனவே கிரிமியாவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையில் உக்ரைன் தொடர்ந்து உறுதியாக உள்ளது.
கிரிமியா – ரஷ்யாவுக்கான பாலம்:
கிரிமியாவையும் ரஷ்யாவையும் இணைக்கும் 19 கி.மீ. நீளப் பாலம் ஒன்றே உள்ளது. சாலை, ரயில் என இரண்டு பாதைகளுடன் கூடிய இந்தப் பாலம் வழியே 2022-இல் ரஷ்ய ராணுவம் உக்ரைனுக்குள் ஊடுருவியது. பின்னர் உக்ரைன் அதனைத் தாக்கினாலும், உடனடியாக ரஷ்யா பழுது பார்த்தது. இது, கிரிமியாவை ரஷ்யா எவ்வளவு முக்கியமாகக் கருதுகிறது என்பதற்கான சாட்சி.
ட்ரம்ப்பின் நிலைப்பாடு:
இந்நிலையில், “கிரிமியாவை ரஷ்யாவின் பகுதியாக அங்கீகரிக்கலாம்” என்ற கருத்தை முன்வைத்துள்ளார் ட்ரம்ப். ஆனால், அதனை உக்ரைன் ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை. ரஷ்ய ஆதரவாகவே அவரது நிலைப்பாடு இருக்கிறது என விமர்சனங்கள் எழுகின்றன. இது போர் நிறுத்தத்துக்குப் பதிலாக, புதிய சிக்கல்களை உருவாக்கும் என்றும் பலர் எச்சரிக்கின்றனர்.
நேட்டோவின் பங்கு:
1949-இல் 12 நாடுகள் இணைந்து உருவாக்கிய ராணுவக் கூட்டமைப்பே நேட்டோ. ஒரு உறுப்பு நாடு தாக்குதலுக்குள்ளானால், மற்ற நாடுகள் சேர்ந்து காப்பது அதன் விதிமுறை. உக்ரைன் நேட்டோவில் சேர்ந்தால், ரஷ்யாவிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தது. ஆனால், இதை பேராபத்தாகக் கருதி ரஷ்யா கடுமையாக எதிர்த்தது. இதுவே போர் வெடித்ததற்கான முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.
ட்ரம்ப்பின் ‘செக்’, ஜெலன்ஸ்கியின் பதில்:
ஜெலன்ஸ்கியைச் சந்திக்கும் முன், ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில், “ஜெலன்ஸ்கி விரும்பினால் போரை உடனே முடிக்க முடியும். விரும்பவில்லை என்றால், அவர் போராடிக்கொண்டே இருக்கலாம். நேட்டோவில் உக்ரைனை சேர்க்கக்கூடாது. 12 ஆண்டுகளுக்கு முன் கிரிமியா ரஷ்யாவுக்கு வழங்கப்பட்டது. அதை மாற்ற முடியாது” எனக் குறிப்பிட்டார்.
உடனடியாக பதிலளித்த ஜெலன்ஸ்கி, “கிரிமியாவை தாரை வார்த்த சலுகைகள் புதினை வலுப்படுத்தின. அதன் விளைவாக கிழக்கு பகுதிகள், டான்பாஸை இழந்தோம். இது புதினுக்கு புதிய தாக்குதலுக்கான ஊக்கமாக அமைந்தது. நாங்கள் போராடுவதன் நோக்கம் – கீவ், ஒடேஸா, கார்கிவ் போன்ற பகுதிகள் மீண்டும் இழக்கப்படாமல் காப்பதே. நாங்கள் எங்களது சுதந்திரத்துக்காகப் போராடுகிறோம்” என்று வலியுறுத்தினார்.
இந்நிலையில், ரஷ்யாவுக்குப் பணிவது போல உக்ரைன் நடக்குமா அல்லது ட்ரம்ப்பின் திடீர் நிலைப்பாட்டுக்கு நேட்டோ நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்து மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது, இன்று நடைபெறும் சந்திப்புக்குப் பின்னரே தெளிவாகும்.