அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று சந்திப்பு

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, இன்று வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

சமீபத்தில் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலம் ஆங்கரேஜில் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேரடியாக சந்தித்து, ரஷ்யா–உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர். அதன் தொடர்ச்சியாக, ஜெலன்ஸ்கியின் அமெரிக்க பயணம் நடைபெறுகிறது.

இந்த சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வோன் டெர் லியென், ஜெர்மனி பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ், பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இத்தாலி பிரதமர் ஜோர்ஜியா மெலோனி ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.

உக்ரைன் தரப்பின் தகவல்படி, டோனெஸ்க் பிராந்தியத்தின் சுமார் 70% நிலப்பரப்பை தற்போது ரஷ்யா கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அந்த பகுதியை முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என புதின் வலியுறுத்தி வருகிறார். அதற்கு பதிலாக, ரஷ்யாவின் வசம் உள்ள சிறிய பகுதியை உக்ரைனுக்கு வழங்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் டோனெஸ்க் பகுதி இயற்கை வளங்கள் மற்றும் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்ததால், அதை உக்ரைன் கைவிட இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உக்ரைன் நேட்டோவில் இணையக் கூடாது என்ற புதினின் நிபந்தனையையும் உக்ரைன் ஏற்க முடியாது. இதனைத் தீர்மானிக்கவும், போரை நிறுத்தவும் அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் விரிவான விவாதங்கள் நடைபெற உள்ளன என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

Facebook Comments Box