அதிபர், பிரதமர் மாற்றப்படுவார்கள் என்ற செய்தி உண்மையல்ல: பாகிஸ்தான் ராணுவத் தளபதி
பாகிஸ்தான் அதிபரும் பிரதமரும் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்று அந்நாட்டின் ராணுவத் தளபதி அசிம் முனிர் தெரிவித்துள்ளார். மேலும், தாம் அந்தப் பதவிகளில் ஆர்வம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவின் “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கைக்கு பிறகு பாகிஸ்தானின் அரசியல் சூழலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த நடவடிக்கைக்கு பிந்தைய காலகட்டத்தில் ராணுவத் தளபதி அசிம் முனிர் அமெரிக்கா சென்று, அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடன் கலந்துரையாடினார். அதற்குப் பின்பு சில வாரங்களுக்குப் பிறகு மறுமுறையும் அவர் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டார்.
இவ்வாறான பயணங்கள் பாகிஸ்தானுக்குள் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் பரவலான விவாதங்களை ஏற்படுத்தின. இதற்கு முன்னர், அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் அசிம் முனிர் இடையே கருத்து முரண்பாடுகள் உள்ளன என்ற தகவல்கள் வந்தன. தற்போது பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடனும் அசிம் முனிருக்கு இடையே பிணக்கம் நிலவுகிறது என்று கூறப்படுகிறது. இதனைக் கொண்டு, பாகிஸ்தானில் அதிபர் மற்றும் பிரதமரை நீக்கத் திட்டமிடப்படுவதாக செய்திகள் பரவி வருகின்றன. ராணுவ ஆட்சி மீண்டும் அமைய வாய்ப்பு அதிகம் என்றே பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால், இதனை முழுமையாக மறுத்து விட்டதாக பாகிஸ்தானின் ஜாங் பத்திரிகை எழுத்தாளர் சுஹைல் வாராய்ச் தெரிவித்துள்ளார். அவர் எழுதிய கட்டுரையில், “அமெரிக்கா பயணத்தின் போது அசிம் முனிர் பெல்ஜியமும் சென்றார். அங்குள்ள பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற கூட்டத்தில் அவர், ‘கடவுள் என்னை நாட்டின் பாதுகாவலனாக ஆக்கியுள்ளார். அதற்கு மேல் எந்தப் பதவியும் எனக்கு தேவையில்லை. நான் ஒரு ராணுவ வீரன்; நாட்டிற்காக உயிர் துறப்பதே எனது மிகப்பெரிய நோக்கம்’ எனக் கூறினார்.
அந்தக் கூட்டத்திற்கு அப்பால் தனிப்பட்ட முறையிலும் எனக்கு சுமார் இரண்டு மணி நேரம் பேசியார். அப்போது கூட, அதிபர் மற்றும் பிரதமர் மாற்றம் குறித்த செய்திகளை அவர் திட்டவட்டமாக மறுத்தார். அவை முற்றிலும் பொய்யான வதந்திகள் எனவும், நாட்டின் அரசியல் நிலையை குலைக்க சிலர் பரப்பும் கிசுகிசுக்கள் மட்டுமே எனவும் தெரிவித்தார்” என்று குறிப்பிட்டார்.
அசிம் முனிர் மேலும், “பாகிஸ்தானின் அமைதியை பாதிக்க இந்தியா பினாமிகளைப் பயன்படுத்துகிறது. ஆப்கனியர்களுக்கு பல ஆண்டுகளாக நாங்கள் உதவி, சலுகைகள் அளித்தோம். ஆனால் இப்போது அவர்கள் இந்தியாவுடன் சேர்ந்து எங்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்கின்றனர்.
பாகிஸ்தானில் மதிப்புமிக்க கனிமங்கள் உள்ளன. அவற்றை முறையாகப் பயன்படுத்தினால் நாட்டின் கடனை பெருமளவு குறைக்க முடியும். அடுத்த சில ஆண்டுகளில் பாகிஸ்தான் வளமான நாடுகளில் ஒன்றாக மாறும்.
‘ரெக்கோ டிக்’ சுரங்கத் திட்டத்தின் மூலம், அடுத்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 2 பில்லியன் டாலர் வருமானம் கிடைக்கும். அந்த தொகை தொடர்ந்து அதிகரிக்கும். அமெரிக்கா, சீனா ஆகிய இரு நாடுகளுடனும் பாகிஸ்தான் சமநிலையான உறவைத் தக்கவைத்துக் கொள்வோம். ஒருவருக்காக இன்னொருவரை விட்டுக் கொடுக்கப் போவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.