இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி அதிகரிப்புக்கு உள்நாட்டு தேவை காரணமல்ல: அமெரிக்காவின் குற்றச்சாட்டு
இந்தியா ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கி வருவதற்கு காரணம் உள்நாட்டு தேவை அல்ல என்று வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தும் நிலையில், இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் ரஷ்யாவுக்கு நிதி உதவி செய்கிறது என அவர் முன்பே குற்றம் சாட்டியிருந்தார். “அமைதிக்கான பாதை புதுடெல்லி வழியாகவே செல்கிறது” என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இன்று வெளியிட்ட புதிய சமூக ஊடக பதிவுகளில், நவரோ இந்தியாவை மேலும் கடுமையாக விமர்சித்தார். “உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, அமெரிக்காவின் மூலோபாய பங்காளி போல நடத்தப்பட விரும்பினால், அதற்கேற்ப நடந்துகொள்ள வேண்டும்” என அவர் கூறினார்.
அவர் மேலும், “இந்தியாவின் அதிக வரிவிதிப்புக்கு பதிலளிக்க 25% வரி விதிக்கப்படுகின்றது; தேசிய பாதுகாப்புக்காக கூடுதலாக 25% வரியும் விதிக்கப்படும். மலிவான விலைக்கு ரஷ்யா எண்ணெயை வாங்கி சுத்திகரித்து, இந்தியா ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. போர் தொடங்குவதற்கு முன்பு இந்தியா இறக்குமதி செய்த எண்ணெயில் ரஷ்யாவின் பங்கு 1%க்கும் குறைவாக இருந்தது. இன்று அது 30%க்கு மேல் உயர்ந்துள்ளது. இந்தியா தற்போது தினமும் 15 லட்சம் பீப்பாய்களுக்கு மேல் ரஷ்யா எண்ணெய் வாங்குகிறது. ஆனால் உள்நாட்டு தேவைக்காக அல்ல; நாள் ஒன்றுக்கு 10 லட்சம் பீப்பாய்களுக்கு மேல் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்கிறது” என்றார்.
அவர் சுட்டிக்காட்டியதாவது, “இதனால் இந்தியாவின் சுத்திகரிப்பு நிறுவனங்களும், ரஷ்யாவும் லாபம் அடைகின்றன. அமெரிக்காவுக்கு இந்தியாவுடன் 50 பில்லியன் டாலர் வர்த்தக பற்றாக்குறை உள்ளது. ரஷ்யா எண்ணெய்க்கு இந்தியா அமெரிக்க டாலரை செலவிடுகிறது. அதோடு ஆயுதங்களையும் வாங்குகிறது. இதனால் அமெரிக்காவுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இந்திய சந்தை அமெரிக்க பொருட்களுக்கு திறக்கப்படவில்லை; அதிக வரி மற்றும் தடைகள் காரணமாக அமெரிக்கப் பொருட்கள் இந்தியாவிற்கு வருவதில்லை” எனவும் குறிப்பிட்டார்.
ஆனால், இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரியை ஜனநாயகக் கட்சியின் வெளியுறவுக் கொள்கைக் குழு கடுமையாக எதிர்த்துள்ளது. “சீனா போன்ற நாடுகள் ரஷ்யாவிடமிருந்து இந்தியாவைவிட அதிக கச்சா எண்ணெய் வாங்கிக்கொண்டிருக்கின்றன. அவர்களுக்கு பதிலாக இந்தியா மீது மட்டுமே நடவடிக்கை எடுப்பது இரு நாட்டு உறவையும் பாதிக்கும். இது உக்ரைன் குறித்து அல்ல” என அந்தக் குழு தெரிவித்துள்ளது.