ட்ரம்ப் விதித்த கூடுதல் வரிகளை ரத்து செய்ய அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு
வெளிநாடுகளுக்கு எதிராக காங்கிரஸின் ஒப்புதல் இன்றி அதிக வரிகளை விதித்த முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவுகளை, அமெரிக்க கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
ட்ரம்ப் தனது ஆட்சிக்காலத்தில், கனடா, மெக்சிகோ, சீனா, இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எதிராக அதிக இறக்குமதி வரிகளை விதித்தார். குறிப்பாக, சீனாவுடன் ஏற்பட்ட வர்த்தக மோதலின் போது பல மடங்கு வரிகளை உயர்த்தியதோடு, இந்தியப் பொருட்களுக்கு 25% வரி, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக கூடுதலாக 25% வரி விதித்து மொத்தம் 50% ஆக உயர்த்தினார்.
இது அமெரிக்க உள்நாட்டு பொருளாதாரத்தையும், மக்களின் வாழ்கைச் செலவையும் பாதிக்கும் என்று பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த வரி உத்தரவுகளுக்கு எதிராக கடந்த மே மாதம் நியூயார்க் வர்த்தக நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (வெள்ளிக்கிழமை) அளித்த தீர்ப்பில்,
- “ட்ரம்ப் பல நாடுகளுக்கு எதிராக அதிக வரிகளை விதித்தது சட்டவிரோதமானது.
- தேசிய அவசரநிலை எனக் கூறி அதை நியாயப்படுத்த முயன்றாலும், காங்கிரஸின் அதிகாரத்தை மீறியுள்ளார்.
- காங்கிரஸ் அதிபருக்கு சில வரையறுக்கப்பட்ட அதிகாரங்களை வழங்கினாலும், வரம்பற்ற அதிகாரம் வழங்கப்படவில்லை.
எனவே கூடுதல் வரிகளை நீக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளது.
இதன்வழி, நியூயார்க் வர்த்தக நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்துள்ள கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றம், அதேசமயம் மேல்முறையீட்டுக்கு அக்டோபர் 14 வரை கால அவகாசம் வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பு ட்ரம்ப்க்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றமும் இதை உறுதிப்படுத்தினால், கூடுதல் வரிகள் மூலம் வசூலிக்கப்பட்ட தொகையை திருப்பி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த ட்ரம்ப், தனது அறிக்கையில்,
“இந்த தீர்ப்பு அமெரிக்காவுக்கு பேரழிவாகும். அனைத்து வரிகளும் தொடர்ந்து அமலிலேயே உள்ளன. அவற்றை ரத்து செய்வது நாட்டை சீரழிக்கும்” என்று கடும் விமர்சனம் செய்துள்ளார்.