“இந்தியா பள்ளி மாணவன் அல்ல” – டிரம்ப் விதித்த வரி கொள்கை விவேகமற்றது: அமெரிக்க பத்திரிகையாளர் கண்டனம்

“இந்தியா ஒரு பள்ளிக் குழந்தை அல்ல; அது ஒரு பெரிய நாடு. அதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த 50% வரி எந்தவிதமான விவேகமான கொள்கையும் அல்ல” என்று அமெரிக்க பத்திரிகையாளர் ரிக் சான்சேஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலுக்கு மத்தியிலும், இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கி வந்ததால், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்து அதிபர் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்தார். ஆனால், இந்த வரி சட்டபூர்வமற்றது என்று அமெரிக்க மேல் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்து ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ரிக் சான்சேஸ்,

  • “இந்தியாவை பள்ளி மாணவனைப் போல நடத்தக்கூடாது. இந்தியா மிகப்பெரிய நாடு.
  • ட்ரம்ப் எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் ஆராய்ச்சி, அறிவியல் சிந்தனை இல்லாமல் இருக்கும்.
  • இந்தியா எடுக்கும் முடிவுகளில் அமெரிக்கா தலையிட முயற்சிக்கிறது. ஆனால், இந்தியா தனது நிலைப்பாட்டை உறுதியாக காக்கிறது; இது பாராட்டத்தக்கது” என்றார்.

மேலும் அவர்,

“அமெரிக்காவின் வரிக் கொள்கை வெளிப்படையாகப் பார்ப்பவர்களுக்கு நியாயமானதாக தோன்றினாலும், உண்மையில் அது அவமதிப்பானதும் விவேகமற்றதும் ஆகும். ரஷ்யா-உக்ரைன் போரின் உண்மையான காரணத்தை ட்ரம்ப் நிர்வாகம் புரிந்து கொள்ளவில்லை. நீண்ட வரலாறு, வளம், திறன் கொண்ட இந்தியாவை பள்ளிக் குழந்தை போல் நடத்துவது மிகுந்த அவமதிப்பு. இந்தியா ஏற்கனவே முன்னேறிய நாடு” என்று குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து,

“ரஷ்யாவிலிருந்து சீனாவும் கச்சா எண்ணெய் வாங்குகிறது. ஆனால், அதற்கு எதிராக அமெரிக்கா எதுவும் செய்யவில்லை. இந்தியாவுக்கு எதிராக மட்டும் 50% வரி விதித்தது, ட்ரம்பின் தனிப்பட்ட கோபத்தின் விளைவு. சர்வதேச பிரச்சனைகளின் பின்னணி குறித்த புரிதல் அமெரிக்க தலைவர்களுக்கு குறைவாகவே உள்ளது. அதேபோல், ட்ரம்பின் ஆலோசகர் பீட்டர் நவேரோ, ‘ரஷ்யா-உக்ரைன் போர் பிரதமர் மோடி காரணமாக நடக்கிறது’ என்று கூறியது முற்றிலும் நகைப்புக்குரியது” என்று கண்டித்தார்.

Facebook Comments Box