உக்ரைன் மோதல் விரைவில் முடிவடைய வேண்டும் – புதினிடம் மோடி வலியுறுத்தல்

உக்ரைனில் நடைபெற்று வரும் மோதலை விரைவில் முடிவுக்குக் கொண்டுவரி, நிலையான அமைதி நிலவ வேண்டும் என்பதே மனிதகுலத்தின் பொதுவான விருப்பம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனான சந்திப்பில் அவர் இதை வலியுறுத்தினார்.

சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டின் போதுஇரு தலைவர்களும் சந்தித்து உரையாடினர். சந்திப்பு நடைபெறும் இடத்துக்கு, அவர்கள் ஒரே வாகனத்தில் சென்று வந்தனர். இதில் பொருளாதாரம், நிதி, எரிசக்தி போன்ற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இத்துறைகளில் ஏற்பட்டுவரும் முன்னேற்றத்தில் இருவரும் திருப்தி தெரிவித்தனர்.

“சவாலான காலங்கள் உட்பட அனைத்துச் சூழ்நிலைகளிலும் இந்தியா-ரஷ்யா தோளோடு தோள் நின்று செயல்பட்டு வருகின்றன. இந்த உறவு இரு நாடுகளுக்கும் மட்டுமல்லாது உலக அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளத்திற்கும் முக்கியமானது” என மோடி குறிப்பிட்டார்.

மேலும், உக்ரைன் நிலைமையைத் தீர்க்க சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்த அவர், “மோதலை விரைவில் முடிவுக்குக் கொண்டுவந்து, அமைதி நிலைநிறுத்தப்பட வேண்டும். இது மனிதகுலத்தின் கோரிக்கை. அனைத்துத் தரப்பும் ஆக்கப்பூர்வமாக முன்னேற வேண்டும் என நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

புதினுடனான உரையாடலை நினைவில் நிற்கத்தக்கதாகக் குறிப்பிட்ட மோடி, “தொடர்ந்து இருநாடுகளுக்கிடையில் பல்வேறு உயர்மட்ட ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. வரும் டிசம்பரில் நடைபெற உள்ள 23வது இந்தியா-ரஷ்யா உச்சிமாநாட்டில், உங்கள் (புதின்) பங்கேற்பை இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்” எனவும் தெரிவித்தார்.

Facebook Comments Box