சீனாவில் நடந்த ஷாங்காய் உச்சி மாநாட்டில் பஹல்காம் தாக்குதலை கண்டித்த கூட்டறிக்கை: காரில் பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புதின் ரகசிய ஆலோசனை

சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில், காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. மாநாட்டுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடியும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் ஒரே காரில் அமர்ந்து சுமார் ஒரு மணி நேரம் ஆழ்ந்த ஆலோசனை நடத்தினர்.

20-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்ற இந்த மாநாடு கடந்த வாரம் துவங்கியது. முதல் நாளில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். பின்னர், மோடி – புதின் சந்திப்பு நடைபெற்றது.

மோடி பேச்சு:

இந்திய-ரஷ்ய உச்சி மாநாடு டிசம்பரில் டெல்லியில் நடக்க உள்ளது. அதில் புதின் பங்கேற்க உள்ளார். இந்தியர்கள் அனைவரும் அவரது வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். புதினை ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும், அது மறக்க முடியாத அனுபவமாகிறது. இந்தியா – ரஷ்யா நட்பு, கடினமான காலங்களிலும் உறுதியாக இருந்து வருகிறது. உலக அமைதி, வளம், நன்மைக்காக இரு நாடுகளும் இணைந்து செயலில் ஈடுபட்டு வருகின்றன.

உக்ரைன் போருக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு கிடைக்க வேண்டும். நிரந்தர அமைதி நிலவுவது அவசியம்.

புதின் பேச்சு:

ரஷ்யா – இந்தியா நட்பு உறவு எல்லா துறைகளிலும் பலப்படுத்தப்பட்டு வருகிறது. எஸ்சிஓ அமைப்பு குளோபல் சவுத் கூட்டமைப்பின் ஒரு முக்கிய அங்கமாக செயல்படுகிறது.

மாநாட்டின் முடிவில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. “இந்த தாக்குதலுக்குப் பொறுப்பானவர்கள், அவர்களுக்கு ஆதரவு அளித்தவர்கள் நீதிமன்றம் முன் நிறுத்தப்பட வேண்டும்” என்று அதில் வலியுறுத்தப்பட்டது. தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும் இருந்தது.

முந்தைய ஜூன் மாதத்தில் சீனாவில் நடந்த எஸ்சிஓ பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில், இந்தியா இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் எனக் கோரியிருந்தது. ஆனால் அப்போது சீனா அதை மறுத்ததால் கூட்டறிக்கை வெளியிடப்படவில்லை. இம்முறை, பஹல்காம் தாக்குதல் கண்டிக்கப்பட்டிருப்பது இந்தியாவுக்கான வெற்றி என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

மாநாடு முடிந்ததும், புதின் தனது காரில் ஹோட்டலுக்கு புறப்பட்டார். அந்த காரிலேயே மோடியையும் உடன் அழைத்துச் சென்றார். அங்கு சென்ற பின்னரும் இருவரும் கார் உள்ளே சுமார் ஒரு மணி நேரம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். அமெரிக்க வரி கொள்கை, உக்ரைன் போர் உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதனிடையே, புதின் – மோடி இருவரும் கைகோர்த்து நடந்து சென்ற போது, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஓரமாக நின்று விரக்தியுடன் பார்த்த காட்சி இணையத்தில் வைரலானது. மாநாட்டில் அவர் இந்தியாவை குற்றம்சாட்டியிருந்தாலும், அது கவனிக்கப்படவில்லை. முழு மாநாட்டிலும் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்ட சூழ்நிலை நிலவியது என சீன ஊடகங்கள் குறிப்பிட்டன.

மோடி உரை:

மாநாட்டின் இறுதி நாளில் பேசிய பிரதமர் மோடி, “ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அமைதி, பாதுகாப்பு அவசியம். தீவிரவாதத்தை வெளிப்படையாக ஆதரிக்கும் சில நாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. தீவிரவாதத்திற்கு எதிராக இரட்டை நிலைப்பாடு வேண்டாம். அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும். தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களுக்கும், நிதியுதவி செய்பவர்களுக்கும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை தனிமைப்படுத்த வேண்டும்.

பஹல்காம் தாக்குதல் இந்தியாவின் ஆன்மாவை குறிவைத்தது. அதற்கு கண்டனம் தெரிவித்த நண்பர்நாடுகளுக்கு நன்றி. எஸ்சிஓ நாடுகள் இடையே வலுவான வர்த்தக வழித்தடங்கள் இருக்க வேண்டும். இளம் ஆராய்ச்சியாளர்கள், ஸ்டார்ட்அப்புகள் இணைந்து செயல்பட வேண்டும். இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் எஸ்சிஓ நாடுகள் பங்கேற்க வேண்டும். ஐ.நா. சபை சீர்திருத்தத்திற்காக எஸ்சிஓ நாடுகள் குரல் எழுப்ப வேண்டும்” என்றார்.

Facebook Comments Box