ஆப்கானிஸ்தானில் கொடிய நிலநடுக்கம்: 800-க்கும் மேற்பட்டோர் பலி – பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்
ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடர்ந்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 800-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் உள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கிழக்கு ஆப்கானிஸ்தானின் குணார் மாகாணத்தில், ஜலாலாபாத் அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளிலும் தாக்கம் ஏற்படுத்தியது. பல கிராமங்களின் வீடுகள் தரைமட்டமாகிப் போனன.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, ஜலாலாபாத்தின் கிழக்கே 27 கிலோமீட்டர் தூரத்தில், 8 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நூர் கால், சாவ்கி, வாட்பூர், மனோகி, சபா தாரா போன்ற பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இரவு 11.47 மணிக்கு 6.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட முதல் நிலநடுக்கத்துக்குப் பிறகு, சில நிமிடங்களில் 4.5 ரிக்டர் அளவில் மீண்டும் அதிர்வு உணரப்பட்டது. இதுவரை 2,500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள சிசிடிவி காட்சிகள், பல மாடிக் கட்டிடங்கள் நொடிகளில் சிதிலமடைந்த காட்சிகளை வெளிப்படுத்துகின்றன. சில கிராமங்கள் முற்றிலும் அழிந்துவிட்டன. அதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
மருத்துவக் குழுவினர் குணார், நங்கார்ஹர் மற்றும் தலைநகர் காபூலிலிருந்து விரைவாக அனுப்பப்பட்டுள்ளனர் என்று ஆப்கானிஸ்தான் பொது சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஷராபத் ஸமான் தெரிவித்துள்ளார். இது ஆப்கானிஸ்தான் வரலாற்றிலேயே மிக மோசமான நிலநடுக்கமாகக் கருதப்படுகிறது.
பிரதமர் மோடி இரங்கல்:
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததை அறிந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த துயரத்தை வெளிப்படுத்தினார். தனது எக்ஸ் (X) பக்கத்தில் பதிவிட்ட அவர், “ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் பல உயிர்களை காவுகொண்டது மிகவும் வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்க இந்தியா எப்போதும் தயாராக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.