உலகில் ஒவ்வொரு 100 மரணங்களில் ஒன்றுக்கும் அதிகமானவை தற்கொலை காரணம்: உலக சுகாதார நிறுவனம்

உலகளவில் நிகழும் ஒவ்வொரு 100 மரணங்களிலும், ஒன்றுக்கும் மேற்பட்ட மரணங்கள் தற்கொலையால் ஏற்படுகின்றன என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவித்துள்ளது. 2021-ஆம் ஆண்டு மட்டும் தற்கொலையால் 7 லட்சத்து 27 ஆயிரம் பேர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், உலகம் முழுவதும் 100 கோடிக்கும் மேற்பட்டோர் பல்வேறு மனநலக் கோளாறுகளுடன் வாழ்ந்து வருவதாகவும் WHO அறிக்கை தெரிவிக்கிறது.

மனநலம் குறித்த புதிய அறிக்கைகள்

உலக மக்களின் மனநலம் தொடர்பாக “மனநலம் இன்று” மற்றும் “மனநல வரைபடம் 2024” என்ற தலைப்புகளில் WHO இரண்டு அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. அதில்:

  • உலகளவில் ஒவ்வொரு 20 தற்கொலை முயற்சிகளில் ஒன்றே மரணமாகிறது.
  • 2021-ல் மனநலக் கோளாறுகளுக்குள், பதட்டமும் மனச்சோர்வும் மூன்றில் இரண்டு பங்கு அளவுக்கு அதிகமாக இருந்தன.
  • 2011 முதல் கிடைத்த தகவல்படி, 20–29 வயதினருக்கு அதிகமான மனநல பாதிப்பு உள்ளது.
  • ஆண்களுக்கு அதிகம் காணப்படும் பிரச்சினைகள்: கவனக்குறைவு – அதீத செயற்பாட்டு கோளாறு, ஆட்டிசம், அறிவு வளர்ச்சி குறைபாடு.
  • பெண்களுக்கு பொதுவான பிரச்சினைகள்: பதற்றம், மனச்சோர்வு, உணவுக் கோளாறுகள்.

மனநல பாதிப்பு மற்றும் தற்கொலை அபாயம்

  • மனநலக் கோளாறுகள் பொதுவாக பதற்றத்துடன் தொடங்கி பின்னர் மனச்சோர்வாக மாறுகின்றன.
  • 40 வயதுக்கு பின் மனச்சோர்வு அதிகம் காணப்படுகிறது; 50–59 வயதில் உச்சம் அடைகிறது.
  • அனைத்து நாடுகளிலும், சமூக-பொருளாதார நிலைகளை பொருட்படுத்தாமல், இளைஞர்களின் மரணத்திற்கான முக்கிய காரணமாக தற்கொலை காணப்படுகிறது.

குறைக்கும் முயற்சிகள்

உலக சுகாதார நிறுவனம் 2030க்குள் தற்கொலை விகிதத்தை மூன்றில் ஒரு பங்கு குறைப்பதே இலக்காக வைத்துள்ளது. ஆனால், அதற்குள் அதிகபட்சம் 12% மட்டுமே குறையக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனைச் சாதிக்க போதுமான நிதி, வலுவான தலைமைத்துவம், மற்றும் செயல்பாட்டில் உள்ள திட்டங்களை திறம்பட முன்னெடுப்பதே முக்கியம் என்று WHO வலியுறுத்தியுள்ளது.

Facebook Comments Box