ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: உயிரிழப்பு 1,411 ஆக உயர்வு; 3,124 பேர் காயம்

ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,411 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3,124 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதி குணார் மாகாணம், ஜலாலாபாத் அருகே இரவு 11.47 மணியளவில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. பின்னர் சில நிமிடங்களில் 4.5 ரிக்டர் அளவில் மீண்டும் அதிர்வு ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்ததாவது, ஜலாலாபாத்திலிருந்து கிழக்கே 27 கி.மீ. தொலைவில், 8 கி.மீ. ஆழத்தில் இந்நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது.

பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய கிராமங்களிலும், குணார் மாகாணத்தின் நுர்கல், சாவ்கே, வாடாபூர், மனோகி, சபாதாரா உள்ளிட்ட பகுதிகளிலும் வீடுகள், பல மாடிக் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதனால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்பட ஏராளமானோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். பல கிராமங்கள் முற்றிலும் நாசமாகியுள்ளன. சம்பவ இடங்களின் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.

ஆப்கானிஸ்தான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டதாவது:

“குணார் மாகாணத்தின் நுர்கல், சாவ்கே, சபாதாரா, பெச்ச்தாரா, வாடாபூர், அசதாபாத் பகுதிகளில் இதுவரை 1,411 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தோர் 3,124 பேர். மொத்தம் 5,412 வீடுகள் இடிந்துள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஹெலிகாப்டர்கள் தரையிறங்க முடியாத இடங்களில் கமாண்டோ படைகள் அனுப்பப்பட்டு, மக்கள் மீட்கப்பட்டு விமானங்களின் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் வழியாக உதவிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன,” என அவர் தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box