பற்றி எரியும் இந்தோனேசியா… ‘பிங்க்’ உடையில் பெண்கள் களமிறங்கிய போராட்டம் – பின்னணி என்ன?

தென் கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய தீவு நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா, உலகின் மூன்றாவது பெரிய ஜனநாயக நாடாக அடையாளம் பெற்றுள்ளது. பசிபிக் ரிங் ஆஃப் ஃபயர் எனப்படும் பூகம்ப வலயத்தில் அமைந்திருப்பதால், இந்நாடு நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களுக்கு எப்போதும் ஆளாகும் அபாயத்தில் உள்ளது. 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உருவான சுனாமி ஆசியா முழுவதும் பெரும் அழிவை ஏற்படுத்தியது என்பதையும் மறக்க முடியாது.

இயற்கை சீற்றங்களுக்கு இடையிலும் பாலி உள்ளிட்ட பல சிறிய தீவுகளால் சுற்றுலாவுக்கு புகழ் பெற்ற இந்தோனேசியா, இப்போது அரசுக்கு எதிரான போராட்டக் களமாக மாறியுள்ளது. கடந்த சில நாட்களாக மக்களின் போராட்டத்தால் நாடு முழுவதும் பதற்றம் நிலவுகிறது.

சம்பள விவகாரம் – போராட்டத்தின் காரணம்

சமீப காலமாக இந்தோனேசியாவில் பொருளாதார மந்தநிலை நீடித்து வருகிறது. மக்களின் சராசரி மாத வருமானம் இந்திய ரூபாயில் சுமார் ₹17,000 மட்டுமே. ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் இந்திய மதிப்பில் சுமார் ₹5 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வித்தியாசமே மக்கள் கோபத்தை தூண்டி, போராட்டத்தை தூண்டியது.

கடந்த வாரம் தலைநகர் ஜகார்த்தாவில் மக்கள் திரண்டு நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு, எம்.பி.க்கள் சம்பளம் குறைக்கப்பட வேண்டும் என்று கோஷமிட்டனர்.

மோதலுக்குப் பிறகு நிலைமை தீவிரம்

போராட்டம் வலுத்ததால் ஆயிரக்கணக்கான போலீசார் களமிறக்கப்பட்டனர். அப்போது போலீஸ் வாகனம் ஒன்று வேகமாக ஓடியதில் உணவு டெலிவரி ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். இதனால் மக்கள் மேலும் ஆத்திரமடைந்து, போலீசுக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடுமையான மோதல் வெடித்தது. தடியடி, கண்ணீர்ப்புகை குண்டு, ரப்பர் புல்லட் துப்பாக்கிச் சூடு என கலவர நிலை ஏற்பட்டது. தற்போது போராட்டம் தலைநகரை தாண்டி நாடு முழுவதும் பரவியுள்ளது.

பெண்களின் பிங்க் ஆடையணிந்த போராட்டம்

இந்நிலையில் ஆயிரக்கணக்கான பெண்கள் பிங்க் நிற உடையுடன் போராட்டக் களத்தில் இறங்கியுள்ளனர். கையில் துடைப்பம் ஏந்தி, “எம்.பி. சம்பளம் குறைக்கப்பட வேண்டும்”, “காவல்துறை சீர்திருத்தம் தேவை”, “அரசின் போலியான வாக்குறுதிகள் சர்க்கரை நோய் மாதிரி தான்” என்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளுடன் வந்தனர். அரசாங்கத்தில் ஊழல், அசுத்தம் அதிகமாகி விட்டது. அதை சுத்தம் செய்யவே துடைப்பம் என்ற செய்தியுடன் களமிறங்கினர்.

பெண்களோடு மாணவர்கள், தொழிலாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் இணைந்துள்ளனர். மோதல்களில் இதுவரை 10 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசின் நிலைப்பாடு

போராட்டம் குறித்து அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, “இது தீவிரவாதமும் துரோகமும் கலந்து நடப்பது. காவல்துறை, ராணுவம் வன்முறைக் குழுக்களை வலுவாகக் கட்டுப்படுத்தும்” என்று கூறியுள்ளார்.

ஆனால், அதிபர் இந்நேரத்தில் சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின் வெற்றி விழாவில் கலந்து கொண்டது மக்களின் கோபத்தை மேலும் தூண்டியுள்ளது. “நாடு தீப்பிடித்து எரியும் நிலையில் இருந்தும், அதிபர் வெளிநாட்டில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்” என விமர்சனங்கள் எழுகின்றன.

மாணவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள்

போராட்டக்காரர்கள் முதலில் எம்.பி.க்கள் சம்பளம் குறைக்க வேண்டும் எனக் கோரினர். ஆனால் இப்போது போலீஸ் வன்முறையில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கோரிக்கையை விரிவுபடுத்தியுள்ளனர். கைதானவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றனர்.

இந்தோனேசிய பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் ஒருவர், “தேர்தல் வரும் போதெல்லாம் அரசியல்வாதிகள் வாக்குறுதிகள் தருகிறார்கள். ஆனால் வெற்றிக்குப் பிறகு அவை மறக்கப்படுகின்றன” என்று குற்றஞ்சாட்டினார்.

நாடாளுமன்றத்தின் வாக்குறுதி

நாடாளுமன்ற துணை சபாநாயகர் சூஃப்மி டாஸ்கோ அகமது, “உறுப்பினர்களின் சம்பளம், சலுகைகள் மீளாய்வு செய்யப்படும். வெளிநாட்டு பயணங்கள் கட்டுப்படுத்தப்படும். நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை கொண்டுவரப்படும்” என்று உறுதியளித்தார். மேலும் மாணவர்கள் தங்களின் குறைகளை அரசாங்கத்திடம் நேரடியாக வியாழக்கிழமை முன்வைக்கலாம் என்றும் அறிவித்துள்ளார்.

சர்வதேச எச்சரிக்கை

இந்நிலையில் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிதி நிறுவனம், “இந்தோனேசியாவில் நடக்கும் அரசுக்கு எதிரான போராட்டம், அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு பாதிப்பு உண்டாக்கும். அதிபருக்கு அரசியல் ரீதியாக பெரிய சவாலாக மாறும்” என்று எச்சரித்துள்ளது.

Facebook Comments Box