“உலகம் முன் நிற்கும் தேர்வு… அமைதியா, போரா!” – ராணுவ அணிவகுப்பில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உரை
உலகம் இப்போது அமைதி அல்லது போர் என்ற இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். இரண்டாம் உலகப் போரில் சீனா ஜப்பானுக்கு எதிராக பெற்ற வெற்றியின் 80வது ஆண்டு விழாவை முன்னிட்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்புப் பேரணியில் அவர் இவ்வாறு உரையாற்றினார்.
தியானன்மென் சதுக்கத்தில் நடைபெற்ற இந்த வெற்றி விழாவில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன், இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் கலந்து கொண்டனர். 2015க்குப் பிறகு சீனா இப்படியான மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் 70 நிமிடங்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர். 10 ஆயிரம் ராணுவ வீரர்கள் அணிவகுப்பில் பங்கேற்றனர். 100க்கும் மேற்பட்ட போர் விமானங்கள், ட்ரோன்கள், நவீன ராணுவ உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும், 80 ஆயிரம் அமைதிப் புறாக்கள் மற்றும் பல வண்ணப் பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டன.
மறைந்த தலைவர் மாவோ சேதுங் அணிந்திருந்த உடையை அணிந்து கொண்டு உரையாற்றிய ஜி ஜின்பிங்,
“இன்று மனித சமூகம் இரண்டு முக்கியமான தேர்வுகளை எதிர்கொள்கிறது – அமைதி அல்லது போர், வெற்றி அல்லது முழுமையான தோல்வி. சீன மக்கள் எப்போதும் வரலாற்றின் சரியான பக்கத்தில் நிலைத்து நிற்பார்கள்” என்று கூறினார்.
அணிவகுப்பு தொடங்கியவுடன் ட்ரூத் சமூக ஊடகத்தில் தனது கருத்தை வெளியிட்ட அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்,
“சீனாவுக்கு ஜப்பானிடமிருந்து விடுதலை பெற அமெரிக்கா உதவியது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அமெரிக்காவுக்கு எதிராகச் சேர்ந்து நிற்கும் புதினுக்கும் கிம் ஜோங் உனுக்கும் எனது வாழ்த்துகளைச் சொல்லுங்கள்” என்று குறிப்பிட்டார்.
மேலும், சீனாவின் வெற்றிப் பேரணி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “இந்த அணிவகுப்பை நான் அமெரிக்காவுக்கு எதிரான சவாலாகக் கருதவில்லை. ஜி ஜின்பிங்குடன் எனக்கு நல்லுறவு உள்ளது” என்றும் தெரிவித்தார்.