இந்தியாவுக்கு கூடுதல் எஸ்-400 ஏவுகணைகள் வழங்கும் திட்டம்: ரஷ்ய அதிகாரி தகவல்

இந்தியாவுக்கு கூடுதலாக எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகள் வழங்கும் வாய்ப்புகள் குறித்து தற்போது ஆலோசனை நடைபெற்று வருவதாக, ரஷ்ய ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு பிரிவு தலைவர் டிமிட்ரி சுகாயேவ் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, 2018ஆம் ஆண்டு இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ரக அதிநவீன வான் பாதுகாப்பு ஏவுகணைகளை 5.4 பில்லியன் டாலர் மதிப்பில் வாங்க ஒப்பந்தம் செய்தது. அதன் அடிப்படையில், இந்தியாவுக்கு ஏற்கனவே சில எஸ்-400 அமைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இவை, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வான் பாதுகாப்பு ஏவுகணைகளுடன் இணைந்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்டன. அப்போது, பாகிஸ்தான் நோக்கி ஏவிய ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் நடுவானிலேயே அழித்து, நாட்டை பாதுகாக்க முக்கிய பங்காற்றின.

மேலும், இந்தியா–ரஷ்யா இணைந்து தயாரித்த பிரம்மோஸ் ஏவுகணைகளும் பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் மற்றும் தீவிரவாத முகாம்களை தாக்கின. இதன் தாக்கத்தில், பாகிஸ்தான் சண்டையை நிறுத்தும் நிலைக்கு வந்தது.

இதற்கிடையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் சீனா சென்றிருந்தார். அங்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் சந்தித்து இரு நாடுகளின் இருதரப்பு ராணுவ மற்றும் வாணிப உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். குறிப்பாக, புதின் தனது காரில் மோடியை அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தியது சிறப்பு அம்சமாக அமைந்தது.

இந்த சந்திப்புக்குப் பிறகு, பேட்டியளித்த ரஷ்ய ராணுவ தொழில்நுட்ப பிரிவு தலைவர் டிமிட்ரி சுகாயேவ் கூறியதாவது:

“இந்தியாவுக்கு ஏற்கெனவே எஸ்-400 ஏவுகணைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனை மேலும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கூடுதலாக எஸ்-400 அமைப்புகளை வழங்குவது குறித்து தற்போது விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அதேசமயம், ரஷ்யாவின் சுகோய்–57 போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்கும் தொடர்பிலும் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுகிறது” என்றார்.

Facebook Comments Box