காரில் பிரதமர் மோடியுடன் நடந்த உரையாடல் குறித்து புதின் விளக்கம்
சீனாவில் நடைபெற்ற எஸ்சிஓ மாநாட்டில் இருந்து கூட்ட அரங்கிற்குச் செல்லும் வழியில் பிரதமர் மோடியுடன் காரில் நடந்த உரையாடலை ரஷ்ய அதிபர் புதின் வெளிப்படுத்தியுள்ளார்.
சீனாவின் தியான்ஜின் நகரில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) இருநாள் உச்சி மாநாடு ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடந்தது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் ولாதிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாநாடு முடிந்த பின், இந்தியா–ரஷ்யா இருதரப்பு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்காக பிரதமர் மோடியும் அதிபர் புதினும் ஒரே காரில் சேர்ந்து பயணித்தனர். புதின், மோடிக்காக 15 நிமிடங்கள் காத்திருந்து, தனது காரில் அவரை அழைத்துச் சென்றார். பயண நேரம் 15 நிமிடங்கள் மட்டுமே இருந்தபோதிலும், இருவரும் உரையாடலைத் தொடர்ந்து 45 நிமிடங்கள் கூடுதலாக காரிலேயே பேசிக் கொண்டிருந்தனர். இதுவே சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது.
இந்தச் சூழ்நிலையில், சீனாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், “காருக்குள் மோடியுடன் நீங்கள் என்ன பேசினீர்கள்?” என்ற கேள்வி புதினிடம் எழுப்பப்பட்டது. அதற்கு அவர்,
“இதில் எந்த ரகசியமும் இல்லை. அலாஸ்காவில் நடந்த உரையாடலைப் பற்றி நான் அவரிடம் பகிர்ந்தேன்,” என்று பதிலளித்தார்.
கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி, அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம், ஆங்கரேஜ் நகரிலுள்ள இராணுவ தளத்தில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் இடையே சந்திப்பு நடைபெற்றது. அப்போது அமெரிக்கா–ரஷ்யா உறவு மற்றும் உக்ரைன் போர் குறித்து முக்கியமான விவாதங்கள் நடைபெற்றிருந்தன.