பிரதமர் மோடியுடன் காருக்குள் 1 மணி நேர ரகசிய ஆலோசனை – விளக்கம் அளித்த ரஷ்ய அதிபர் புதின்
சீனாவின் தியான்ஜின் நகரில் அண்மையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கலந்து கொண்டனர்.
மாநாடு முடிந்த பிறகு, அதிபர் புதின் தனது காரில் ஹோட்டலுக்கு திரும்பும்போது, பிரதமர் மோடியையும் அழைத்து சென்றார். ஹோட்டல் வந்த பிறகும், இருவரும் காரிலிருந்து இறங்காமல் சுமார் ஒரு மணி நேரம் தனிப்பட்ட ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த சந்திப்பு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.
இதுகுறித்து கடந்த 3ஆம் தேதி பெய்ஜிங்கில் நிருபர்களிடம் பேசிய புதின், “காரில் பிரதமர் மோடியுடன், உக்ரைன் போரைச் சுற்றிய உரையாடல்களை பகிர்ந்து கொண்டேன். இதே விஷயத்தை ஆகஸ்ட் 15ஆம் தேதி அலாஸ்காவின் ஆங்கரேஜ் நகரில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புடன் பேசியிருந்தேன்” என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “இந்தியா, சீனா, ரஷ்யா ஆகியவை வலுவான கூட்டாளிகள். எங்களது பொருளாதாரம் வலிமையானது. எங்களை யாராலும் அச்சுறுத்தவோ, தண்டிக்கவோ முடியாது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது கூட்டாளிகளிடம் மிரட்டும் போக்கை தவிர்க்க வேண்டும். வரிவிதிப்பு போன்றவற்றால் இந்தியா, சீனாவை கட்டுப்படுத்த முடியாது.
ரஷ்யா-உக்ரைன் போர் நிலப்பரப்பைப் பிடிக்க அல்ல. கிரிமியா, டோனெஸ்க், லுகான்ஸ்க், கேர்சன் போன்ற பகுதிகளில் பெரும்பான்மையாக வாழும் ரஷ்ய மொழி பேசும் மக்கள், ரஷ்யாவுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்கள் விருப்பத்தையே மதிப்பது ஜனநாயகம்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மாஸ்கோவுக்கு வந்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தலாம். நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் உக்ரைனுடன் சுமுக தீர்வு எட்டப்படாவிட்டால், ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தொடரும். பின்வாங்கும் எண்ணமே இல்லை” எனவும் புதின் வலியுறுத்தினார்.