“இந்தியாவுடன் நல்லுறவை மீட்டெடுக்க வேண்டும்” – ட்ரம்ப்புக்கு முன்னாள் அமெரிக்க அதிகாரிகள் வலியுறுத்தல்

அமெரிக்கா – இந்தியா இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மீண்டும் சீரமைக்க வேண்டும் என்று முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் மற்றும் முன்னாள் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கர்ட் எம். கேம்ப்பெல் ஆகியோர், அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிடம் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தியாவுக்கு எதிராக 50% வரி விதித்தது உள்ளிட்ட நடவடிக்கைகள் காரணமாக, இந்தியா – அமெரிக்கா உறவு சீர்குலைந்துள்ளது. அதே நேரத்தில், இந்தியா – சீனா உறவு வலுவடைந்து வருகிறது. இந்த சூழலில், வெளியுறவுத்துறை இதழில் இருவரும் இணைந்து எழுதிய கட்டுரையில்,

“இந்தியா – அமெரிக்க உறவு இதுவரை இல்லாத அளவுக்கு சரிவடைந்துள்ளது. இது கவலைக்குரியது. இந்தியா மீது 50% வரி விதித்த ட்ரம்ப்பின் முடிவு தவறானது. சீனாவிடம் புதுமைத் துறையில் முன்னிலை இழக்காமல் இருக்க, அமெரிக்கா – இந்திய உறவை மீட்டெடுக்க வேண்டும்.

இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, இரு நாடுகளின் நட்பு பெரும் பங்கு வகித்துள்ளது. அதனால், ‘இந்தியா – பாகிஸ்தான் கொள்கை’ என்ற அணுகுமுறையை தவிர்க்க வேண்டும். பாகிஸ்தான் பயங்கரவாதம் மற்றும் அணு ஆயுத பிரச்சினைகளுக்காக அமெரிக்கா அந்நாட்டுடன் உறவை பேணினாலும், அது இந்தியாவின் எதிர்கால நலன்களுக்கு தொடர்பில்லை.

இந்தியா, கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்காவின் முக்கிய சர்வதேச கூட்டாளிகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இந்த நிலை நீடிக்காவிட்டால், அமெரிக்கா தனது வலுவான கூட்டாளியை இழக்க நேரிடும். சமீபத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புதினுடன் நட்பு காட்டியிருப்பது, அமெரிக்கா தன் தவறான கொள்கைகளால் இந்தியாவை எதிரிகள் பக்கம் தள்ளக்கூடும் என்பதை எச்சரிக்கிறது,” என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Facebook Comments Box