அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் கொண்ட நாடுகளுக்கு வரி விலக்கு – ட்ரம்ப் உத்தரவு

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்களில் ஈடுபடும் நாடுகளுக்கு சில பொருட்களில் இறக்குமதி வரி விலக்கு அளிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களாக உலகளாவிய வர்த்தகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா அதிக அளவிலான வரிகளை விதித்தது. ஆனால் இப்போது, அமெரிக்காவுடன் அதிகாரப்பூர்வமாக வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும் நாடுகளுக்கு சலுகை வழங்கும் வகையில் இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

பிரிவு 232 தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முன்பு விதிக்கப்பட்ட ட்ரம்பின் பாதுகாப்பு சார்ந்த வரிகளை குறைக்கும் வகையில், ஒப்பந்த நாடுகளுக்கு 45-க்கும் மேற்பட்ட பொருட்களில் பூஜ்ஜிய சதவீத இறக்குமதி வரி அமல்படுத்தப்படும். இந்த சலுகைகள் செப்டம்பர் 8 முதல் நடைமுறைக்கு வரும்.

அதிபர் கையெழுத்திட்ட உத்தரவில்,

“அமெரிக்காவில் விளைவிக்க முடியாதவை, வெட்ட முடியாதவை அல்லது உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய போதுமான அளவில் உற்பத்தி செய்ய முடியாத பொருட்களுக்கு மட்டுமே வரி விலக்கு வழங்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, சில விவசாயப் பொருட்கள், விமானங்கள் மற்றும் அவற்றின் உதிரிபாகங்கள், மருந்து உற்பத்தியில் காப்புரிமை பெறாத மூலப்பொருட்கள் ஆகியவை விலக்கு பெறுகின்றன. மேலும் தங்கம், கிராஃபைட், பல வகையான நிக்கல், மயக்க மருந்தான லிடோகைன், மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் நோயறிதல் இரசாயனங்கள் போன்றவற்றிற்கும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் கொண்ட நாடுகள், இந்த புதிய உத்தரவைத் தவிர, அமெரிக்க வர்த்தக பிரதிநிதி, வர்த்தகத் துறை, சுங்கத்துறை ஆகியவற்றின் பரிந்துரையின் பேரில் கூட இறக்குமதி வரிகளில் தள்ளுபடி பெற முடியும்.

Facebook Comments Box