பாகிஸ்தான் ரூ.17 லட்சம் கோடி மதிப்புள்ள ரயில் திட்டத்தில் இருந்து சீனா பின்வாங்கியது?
சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழித்தட (CPEC) திட்டத்தில் சீனா தனது முதலீட்டு உதவியை குறைத்து, சில முக்கிய திட்டங்களில் இருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.
CPEC திட்டம் பாகிஸ்தானின் ரயில், துறைமுகம் உள்ளிட்ட கட்டமைப்பு வளர்ச்சிக்காக வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய பொருளாதார கூட்டுத் திட்டமாகும். ஆரம்பத்தில் சீனா பல திட்டங்களுக்கு நிதி உதவி செய்தது. ஆனால், அந்த நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டை சீனா முன்வைத்தது.
இதன் தொடர்ச்சியாக, கராச்சி – ரோஹிரி இடையேயான ரூ.17 லட்சம் கோடி (2 பில்லியன் டாலர்) மதிப்புள்ள ரயில் திட்டத்தில் இருந்து சீனா விலகுவதாக அறிவித்துள்ளது. சமீபத்தில் சீனா சென்றிருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பேச்சுவார்த்தை நடத்தியிருந்தாலும், இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியாது என சீனா தெளிவுபடுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, பாகிஸ்தான் இந்த திட்டத்துக்கான நிதி உதவியைப் பெற ஆசிய வளர்ச்சி வங்கியை அணுகியுள்ளது. அதற்கு சீனாவும் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் கடன் சுமை அதிகரித்திருப்பதும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறைவதும் காரணமாக சீனா பின்வாங்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும், சீன மின்சார நிறுவனங்களுக்கு பாகிஸ்தான் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையையும் இதுவரை வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதுவும் சீனாவின் முடிவுக்கு காரணமாக உள்ளதாக கருதப்படுகிறது.