கூகுளுக்கு ரூ.31,000 கோடி அபராதம் – ஐரோப்பிய யூனியனை ட்ரம்ப் கடுமையாக குற்றம் சாட்டினார்
அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், வாணிப போட்டி விதிகளை மீறியதாகக் கூறி, ஐரோப்பிய யூனியன் 3.5 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.31,000 கோடி) அபராதம் விதித்துள்ளது.
இந்த நடவடிக்கையை, முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக எதிர்த்து, “இது நியாயமற்ற தாக்குதல்” என்று கண்டித்துள்ளார்.
ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் கூறியதாவது:
- “ஐரோப்பா, அமெரிக்காவின் மிகச்சிறந்த நிறுவனங்களில் ஒன்றான கூகுளுக்கு 3.5 பில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளது. இது முற்றிலும் அநியாயமான செயல்.
- அமெரிக்காவில் வரி செலுத்தும் பொதுமக்கள் இதுபோன்ற பாரபட்ச நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
- என் நிர்வாகம் மீண்டும் மீண்டும் சொல்வது போல, இப்படிப்பட்ட அநீதி நிறைந்த அபராதங்களை நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.
- இந்த அபராதத்தை வாபஸ் பெறாவிட்டால், வரிகள் மூலம் பதிலடி கொடுக்கப்படும்.”
மேலும், ஆப்பிள் நிறுவனத்துக்கும் முன்னர் 17 பில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டதையும் அவர் எடுத்துக்காட்டினார். அது வசூலிக்கப்படக் கூடாதது என்றும், “ஐரோப்பா, அமெரிக்க நிறுவனங்களின் பணத்தை பறிக்க திட்டமிட்டு செயல் படுகிறது” என்றும் ட்ரம்ப் கடுமையாக குற்றம் சாட்டினார். அவ்வாறு தொடர்ந்தால், அமெரிக்க நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அநியாயமான அபராதங்களை ரத்து செய்ய பிரிவு 301 நடவடிக்கையை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என எச்சரித்தார்.
சமீபத்தில், கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உட்பட பல தொழில்நுட்ப நிறுவனங்களின் சிஇஓக்களை வெள்ளை மாளிகையில் சந்தித்திருந்த ட்ரம்ப், இந்நிலையில் கூகுளுக்கு வெளிப்படையான ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
ஏன் அபராதம்?
கூகுள் தனது மிகப்பெரிய சந்தை ஆதிக்கத்தை பயன்படுத்தி, காட்சி விளம்பரத் துறையில் போட்டியை குறைக்கும் வகையில் செயல்பட்டதாகவும், விளம்பர தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மறைமுகமாக பாதிப்பு ஏற்படுத்தியதாகவும் ஐரோப்பிய யூனியன் கூறியுள்ளது. இதனால்தான் 27 நாடுகள் கொண்ட ஐரோப்பிய கூட்டமைப்பு கூகுளுக்கு இந்த அபராதத்தை விதித்துள்ளது.