ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்பவர்களுக்கு அமெரிக்கா விதிக்கும் கடும் வரிக்கு ஜெலன்ஸ்கி ஆதரவு

ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகளுக்கு அமெரிக்கா அறிவித்துள்ள அதிக வரியை, உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி ஆதரித்துள்ளார்.

சமீபத்தில், ரஷ்யா உக்ரைனுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத அளவிலான தாக்குதல்களை நடத்தியது. கடந்த சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை மட்டும், 810 ட்ரோன்கள் மற்றும் 13 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்ததுடன், தலைநகர் கீவ்வில் உள்ள அரசு கட்டிடங்கள் சேதமடைந்தன.

இந்த நிலையில், தனது எக்ஸ் பதிவில் ஜெலன்ஸ்கி, “ரஷ்யாவின் வெட்கக்கேடான தாக்குதல்கள் உக்ரைனுக்கு துன்பம் விளைவிப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்றன. புதின் உலகையே சோதிக்கிறார் என்பதற்கான தெளிவான சான்றிதழ் இது. அதனால், ரஷ்யாவுக்கும் அதனுடன் வணிகத்தில் ஈடுபடும் நாடுகளுக்கும் கடுமையான வரிகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுவது அவசியம். இதன் மூலம் அவர்களுக்கு இழப்புகள் உணர்த்தப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “புதின் எந்தவித பேச்சுவார்த்தைகளையும் விரும்பவில்லை. சந்திப்புகளிலிருந்து தப்பிக்கிறார். போர் நிறுத்தம் குறித்த முன்மொழிவுகளையும் மறுக்கிறார். எனவே, பொருளாதார சிக்கல்களை உருவாக்குவதுதான் அவருக்கு சரியான பதிலடி” என்றும் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் பிரேசில் மற்றும் இந்தியா மீது 50%, சுவிட்சர்லாந்து மீது 39%, கனடா மீது 35% வரை கடும் வரிகளை விதித்துள்ளார். இதனால் அந்தந்த நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக அதிருப்தி வெளியிட்டு வருகின்றன.

Facebook Comments Box