ராணுவக் காவலில் இருக்கும் ஆங் சான் சூச்சியின் உடல்நிலை மோசம் – மகன் கவலை
மியான்மர் முன்னாள் ஆட்சியாளரும், நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூச்சி, ராணுவக் காவலில் இருப்பதால் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மகன் கிம் அரிஸ் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான சூச்சி, 2021-ஆம் ஆண்டு ராணுவ ஆட்சியாளர்களால் சிறையில் அடைக்கப்பட்டார். ஊழல் மற்றும் தேர்தல் மோசடி குற்றச்சாட்டுகளின் பேரில், நீதிமன்றம் அவருக்கு மொத்தம் 27 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியுள்ளது.
இந்நிலையில், தனது 80 வயது தாய் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எலும்பு மற்றும் ஈறு பிரச்சினைகளும் இருப்பதாகவும் கிம் அரிஸ் தெரிவித்தார். “ஒரு மாதத்திற்கு முன்பு, அவர் ஒரு இதய நிபுணரைச் சந்திக்க கோரியிருந்தார். அது அனுமதிக்கப்பட்டதா என்பது தெரியவில்லை. சரியான சிகிச்சை இல்லாமல் அவரது உடல்நிலையை மதிப்பிட இயலாது. நான் மிகவும் பதட்டமாக இருக்கிறேன். சூச்சி இன்னும் உயிருடன் உள்ளாரா என்பதையும் உறுதிப்படுத்த முடியவில்லை. மியான்மர் அரசு உடனடியாக என் தாயார் உட்பட அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்” என்று அவர் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ராணுவப் பிரதிநிதி ஜாவ் மின் துன் பதிலளித்ததில், “ராணுவத் தலைவர் மின் ஆங் ஹ்லைங் சமீபத்தில் சீனாவில் பங்கேற்ற நிகழ்ச்சியை திசைதிருப்பும் நோக்கில் இத்தகைய வதந்தி பரப்பப்படுகிறது. சூச்சியின் உடல்நிலை நன்றாக உள்ளது” என விளக்கம் அளித்தார்.
மியான்மரில் ஜனநாயக போராட்டத்தின் அடையாளமாக திகழும் ஆங் சான் சூச்சி, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.