தேசத்தின் கண்ணியத்தை காக்கும் பாடம் மோடியிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்: இஸ்ரேல் நிபுணர் நெதன்யாகுவுக்கு அறிவுரை
இஸ்ரேலும், பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகளும் இடையே மோதல் நீடித்து வரும் சூழலில், “இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு மற்றும் சையோனிஸ்ட் தந்திரக் குழுமம்” (Misgav Institute for Zionist Strategy and National Security) மூத்த நிபுணர் ஸாக்கி ஷெலோம் தெரிவித்த கருத்துகளை ஜெருசலேம் போஸ்ட் செய்தியாக வெளியிட்டுள்ளது.
அதில் அவர் கூறியதாவது:
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் பிரச்சினையிலும், இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா 50% சுங்கவரி விதித்த போதும் பிரதமர் மோடி எடுத்த கடுமையான நிலைப்பாடு, “தேசத்தின் கண்ணியம் என்பது ஆடம்பரமானது அல்ல; அது ஒரு தேசியச் சொத்து” என்பதை உலகிற்கு உணர்த்தியது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “இந்தியா-பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன்” என்று பல முறை கூறியுள்ளார். ஆனால் இந்தியா அதை தொடர்ந்து மறுத்து வந்தது. அப்போது பிரதமர் மோடி, தேசத்தின் மரியாதையைப் புண்படுத்தும் எதற்கும் இடம் கொடுக்காமல் வலுவான நடவடிக்கை எடுத்தார். டிரம்ப் நான்கு முறை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதும், மோடி தனது நிலைப்பாட்டை மாற்றாமல் உறுதியாக இருந்தார்.
இந்த சூழ்நிலையில், தேசத்தின் கண்ணியத்தை எப்படிப் பாதுகாப்பது, அதை தேசியச் சொத்தாக எப்படிக் கருதுவது என்ற விடயங்களை பிரதமர் நெதன்யாகு, பிரதமர் மோடியிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
காசா மருத்துவமனை மீது நடந்த குண்டுவீச்சில் 20 பேர் உயிரிழந்தனர். அதன் பின்னர் இஸ்ரேல் அரசு மற்றும் ராணுவம் விரைவாக விளக்கம் அளித்தன. இஸ்ரேல் ராணுவத் தளபதியும், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் வேறுபட்ட கருத்துகளை வெளியிட்டனர். இது சர்வதேச விமர்சனத்தை அடக்க முயன்றாலும், அவர்களின் பதற்றத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது.
ஆனால், பிரதமர் மோடியின் நடவடிக்கைகள் உலக அரங்கில் தெளிவான ஒரு செய்தியை வெளிப்படுத்தின. “இந்தியாவை யாரும் தாழ்வாக மதிப்பிடுவதையோ அல்லது கீழான நாடாக கருதுவதையோ இந்தியா ஒருபோதும் ஏற்காது” என்பதே அந்தச் செய்தி. எந்தவித சிக்கலான சூழலிலும், தேசத்தின் கண்ணியத்தை காக்க வேண்டும் என்பதே தலைவரின் கடமை எனவும் ஸாக்கி ஷெலோம் குறிப்பிட்டார்.