ஜென்-Z எழுச்சியால் கலக்கும் நேபாளம்: பல அரசு கட்டிடங்களுக்கு தீ வைப்பும், அரசியல் சிக்கலும்
நேபாளத்தில் ஊழல் எதிர்ப்பு போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஜென்-Z தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள் தலைமையில் நடைபெறும் இந்தக் கிளர்ச்சி, தலைநகரான காத்மாண்டுவை எரியும் போர்க்களமாக மாற்றியுள்ளது. அதிபர், பிரதமர், உள்துறை அமைச்சரின் இல்லங்கள் தீவைக்கப்பட்டன. நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம், அரசு அலுவலகங்கள் ஆகியவை போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2008-ஆம் ஆண்டில் 240 ஆண்டுகளாக நிலவி வந்த மன்னராட்சி நீக்கப்பட்டு, ஜனநாயக ஆட்சி அமல்படுத்தப்பட்ட நேபாளம், தொடர்ந்து ஆட்சிமாறல்கள், ஊழல் குற்றச்சாட்டுகள் என அரசியல் குழப்பத்திலேயே தள்ளாடி வருகிறது. 2024 ஜூலையில் கம்யூனிஸ்ட் கூட்டணி உடைந்ததை அடுத்து, சிபிஎன் (யுஎம்எல்), நேபாள காங்கிரஸ் இணைந்து அரசை அமைத்து, சர்மா ஒலியை பிரதமராக தேர்வு செய்தது. ஆனால் ஊழல் குற்றச்சாட்டுகள் நாளுக்கு நாள் அதிகரித்ததால் மக்களின் அதிருப்தி வெடித்தது.
இதற்கிடையில் ‘நெப்போ பேபி’ என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பரவிய வீடியோக்கள் பெரும் சர்ச்சையை கிளப்பின. அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், பிரபலங்களின் வாரிசுகள் ஆடம்பர வாழ்க்கையை வெளிப்படுத்தியதால், வறுமையில் வாடும் பொதுமக்கள் கோபம் அடைந்தனர். சமூக வலைதளங்களில் எதிர்ப்பு குரல் எழுந்த நிலையில், நேபாள அரசு 26 கணக்குகளை முடக்கியது. இது இளைஞர்களின் கோபத்தை மேலும் தூண்டியது.
28 வயதுக்கு உட்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காத்மாண்டுவில் திரண்டு, ஊழலை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தை முற்றுகையிட்ட அவர்கள், பிரதமர் சர்மா ஒலியின் இல்லத்துக்கு கற்களை எறிந்தனர். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 19 பேர் உயிரிழந்தனர்; 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதனால் நாடு முழுவதும் வன்முறை வெடித்தது. பள்ளி, கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் இணைந்தனர். அதிபர், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் இல்லங்கள் தீக்கிரையாகின. நாடாளுமன்றத்தின் ஒரு பகுதியும் தீவைக்கப்பட்டது. பாதுகாப்புப் படையினர் விரைந்து தீயை அணைத்தனர். பிரதமர் சர்மா ஒலி ஹெலிகாப்டரில் தப்பிச் சென்று, வெளிநாட்டில் – குறிப்பாக துபாயில் – தஞ்சமடையக்கூடும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது அமைச்சரவையில் பெரும்பாலான அமைச்சர்களும் விலகினர். பல எம்எல்ஏக்களும் பதவி துறந்துள்ளனர். முன்னாள் பிரதமர்கள் பிரசண்டா, ஷெர் பகதூர் தேவ்பா உள்ளிட்டோரின் வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டது. ஷெர் பகதூர் தேவ்பா தாக்கப்பட்டதில் காயமடைந்தார். நிதி அமைச்சர் விஷ்ணு பவுடாலை, போராட்டக்காரர்கள் சாலையில் அடித்துக் கொண்டுசென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
இந்நிலையில் நேபாளத்தில் வசிக்கும் சுமார் 6 லட்சம் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து கவலை அதிகரித்துள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சகம் நேபாள ராணுவத்திடம் பாதுகாப்பு உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இந்திய தூதரகம், அங்குள்ள இந்தியர்களிடம் வீடுகளை விட்டு தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.