இந்தியாவின் அநியாயமான வர்த்தகம் அமெரிக்காவுக்கு தேவையில்லை: பீட்டர் நவரோ குற்றச்சாட்டு

இந்தியாவின் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் அமெரிக்காவுக்கு ஏற்றதல்ல என, அமெரிக்காவின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா 50% வரி விதித்துள்ளது. இதில் 25% பரஸ்பர வரி விதிப்பின் அடிப்படையில், மேலும் 25% ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததற்கான அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியப் பொருட்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை அநியாயமானதும், காரணமற்றதுமாகும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. இதற்கான மாற்று ஏற்றுமதி சந்தைகளை இந்தியா ஆராயத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோரைச் சந்தித்து உரையாடினார். இந்த சந்திப்பின் மூலம், அந்த நாடுகளுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்த இந்தியா முனைந்துள்ளது.

இதையடுத்து, இந்தியாவுடன் நெருக்கத்தை பேண அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார். சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், “இந்தியா–அமெரிக்கா இடையேயான வர்த்தகத் தடைகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் மோடியுடன் உரையாடுவதை எதிர்நோக்குகிறேன். இரு நாடுகளுக்கும் இடையே எளிதில் தீர்வு கிடைக்கும்” என தெரிவித்துள்ளார். அதற்கு பிரதமர் மோடி, “இந்தியா–அமெரிக்கா இயல்பான கூட்டாளிகள். நமது வர்த்தக பேச்சுவார்த்தைகள் இருநாடுகளின் திறன்களை வெளிப்படுத்த உதவும். ட்ரம்ப் உடன் உரையாடுவதை நான் எதிர்நோக்குகிறேன்” என பதிலளித்தார்.

இதனைத் தொடர்ந்து, பீட்டர் நவரோ தனது சமூக ஊடகப் பதிவில், “இந்தியாவின் அநியாயமான வர்த்தகம் அமெரிக்காவுக்கு தேவையில்லை. ஆனால், அமெரிக்க சந்தைகளையும் கல்வி நிறுவனங்களையும் அணுக இந்தியா விரும்புகிறது. மேலும், அமெரிக்க வேலை வாய்ப்புகளைப் பிடிக்க முயல்கிறது.

ரஷ்யாவின் போர் நிலை தீவிரமடைவதற்கு இந்தியா காரணமாகிறது. மிக அதிக வரிகளை விதிப்பதன் மூலம் இந்தியா தன் பாதுகாப்பில் பிடிவாதமாக உள்ளது. அமெரிக்காவுடன் இந்தியாவுக்கு மிகப்பெரிய வர்த்தக பற்றாக்குறை உள்ளது. லாபத்திற்காக ரஷ்ய எண்ணெயை இந்தியா வாங்குகிறது; அதனால் ரஷ்யாவுக்கு கிடைக்கும் வருவாய் போரை நீட்டிக்கிறது” என குற்றம் சாட்டியுள்ளார்.

Facebook Comments Box