பிரான்ஸில் புதிய அரசுக்கு எதிர்ப்பு – 200 போராட்டக்காரர்கள் கைது
பிரான்ஸ் முழுவதும் புதிய அரசு பதவியேற்பதற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்பாக போலீஸார் 200 பேரை கைது செய்துள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், பிரதமர் ஃபிரான்சுவா பேரூ தோல்வியடைந்ததால் அவரது அரசு கலைக்கப்பட்டது. 577 உறுப்பினர்களைக் கொண்ட பிரான்ஸ் நாடாளுமன்றத்தில், பேரூக்கு எதிராக 364 வாக்குகள் பதிவாகியிருந்தன. ஆதரவாக 194 பேரும், 19 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விலகினர்.
இதன் விளைவாக, கடந்த ஒரு ஆண்டிற்குள் 4-வது முறையாக புதிய பிரதமரை நியமிக்க வேண்டிய சூழலில் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தள்ளப்பட்டார். இதன்படி, பாதுகாப்புத்துறை அமைச்சர் லெகர்னு புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார்.
அந்நியமனத்திற்கு எதிராக தலைமை இல்லாமலேயே பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகரம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி, மக்களை சிதறடித்தனர். ரென்ஸ் நகரில் பேருந்து ஒன்றுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்த சம்பவமும் நடந்தது.
நாடு முழுவதும் பதற்றம் நிலவுவதால், 80 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் புருனோ தெரிவித்தார். போராட்டங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட 200 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.