நேபாள கலவரக் களத்தை பதிவு செய்த பிரிட்டிஷ் யூடியூபரின் வீடியோ உலக கவனத்தை ஈர்த்தது
நேபாளத்தில் ஆளும் அரசுக்கு எதிராக ‘ஜெனரேஷன் Z’ இளைஞர்கள் எழுச்சி பெற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாடு முழுவதும் கடும் கலவரம் வெடித்தது.
போராட்டக்காரர்களை விரட்ட போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் பயனில்லை. இந்த பரபரப்பான சூழலில், போராட்டம் மற்றும் தாக்குதல் காட்சிகளை பிரிட்டனில் இருந்து வந்த யூடியூபர் ஹேரி நேரடியாக களத்தில் நின்று வீடியோவாக பதிவு செய்து தனது Wehatethecold என்ற யூடியூப் சேனலில் வெளியிட்டார்.
இந்த வீடியோ உலகளவில் கவனத்தை ஈர்த்ததற்கு காரணம் – ஹேரி போராட்டக்காரர்களின் பக்கம் நின்று படம்பிடித்ததே. கண்ணீர் புகை குண்டுகளை தவிர்த்து ஓடுவது, போராட்டக்காரர்களின் கருத்துகளை பதிவு செய்தது, பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகள், கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் மீது நடந்த தாக்குதல்கள் என அனைத்தையும் விரிவாகப் பதிவு செய்துள்ளார். பிரதான ஊடகங்கள் செய்ய முடியாததை ஒருவராக அவர் செய்திருப்பது பாராட்டுகளை பெற்றுள்ளது.
செப்டம்பர் 8 அன்று நேபாளத்தில் வன்முறை வெடித்தது. இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர்; 300 பேர் காயமடைந்துள்ளனர். அன்றைய தினம் இருசக்கர வாகனத்தில் பயணித்த ஹேரி, சுமார் 23 நிமிடங்கள் நீளமான இந்த வீடியோவை பதிவு செய்தார். “உங்கள் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம்” என கூறிய உள்ளூர் இளைஞர்களுடன் சேர்ந்து அவர் பல மணி நேரங்கள் போராட்டக் களத்தில் இருந்துள்ளார். தற்போது அந்த வீடியோ மில்லியன் கணக்கான பார்வைகளை பெற்றுள்ளது.
இந்த வன்முறையின் பின்னணியில், பிரதமர் கே.பி. சர்மா ஒலி (73) தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு பதவி விலகியுள்ளது. அதிபர் ராம்சந்திர பவுடேலும் ராஜினாமா செய்ததால், நேபாளத்தில் அரசியல் நெருக்கடி நிலவி வருகிறது. காத்மாண்டு உட்பட பல இடங்களில் ஊழல் அரசியல்வாதிகளின் வீடுகள் குறிவைக்கப்பட்டன.
நாட்டின் பல நகரங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. தலைநகரம் முழுவதும் போலீசாரும் ராணுவமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.