நேபாளத்தின் முதல் பெண் பிரதமர் பதவியில் சுசிலா கார்கி
நேபாளத்தின் இடைக்கால பிரதமராக முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் நேபாளத்தின் முதல் பெண் பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார்.
நேபாளத்தில் ஜெனரேஷன்-ஸீ இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டங்களால், பிரதமர் கே.பி. சர்மா ஒலி (73) தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு பதவி விலகியது. இதனால் அந்நாட்டில் கடும் அரசியல் நெருக்கடி நிலவியது. இடைக்கால பிரதமர் யார் என்பதற்கான விவாதங்கள் தொடர்ந்தன. இதுகுறித்து நேபாள ராணுவத் தளபதி அஷோக் சிக்டெல் ஆலோசனைகள் நடத்தியார்.
அந்த ஆலோசனைகளில், முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கிக்கு போராட்டக்காரர்களிடமிருந்து ஒருமித்த ஆதரவு கிடைத்தது. இதையடுத்து, செப்டம்பர் 12-ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு அவர் இடைக்கால பிரதமராக பதவியேற்றார். அதிபர் ராம் சந்திர பவுடல், சுசிலா கார்கியிடம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்றவுடன் கார்கி தனது முதலாவது அமைச்சரவை கூட்டத்தை நடத்தினார். அதில் அடுத்த ஆண்டு மார்ச் 4-ம் தேதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த ஆறு மாதங்களில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவசரநிலையை அறிவிக்கவும் கார்கி பரிந்துரை செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.