முறிந்த எலும்புகளை மூன்று நிமிடத்தில் ஒட்ட வைக்கும் பசை – சீன விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு
எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கு, மூன்றே நிமிடங்களில் முறிந்த எலும்புகளை இணைத்து விடக்கூடிய சிறப்பு பசையை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய மருத்துவத்தில், எலும்பு முறிவு சிகிச்சை அதன் தன்மைக்கேற்ப செய்யப்படுகிறது. பல்வேறு சமயங்களில், முறிந்த எலும்புகளை இணைக்க உலோக கம்பிகள் அல்லது தகடுகள் பொருத்தப்படுகின்றன. பின்னர் எலும்பு இயல்பாக சேர்ந்ததும், அறுவை சிகிச்சை மூலம் அந்த உலோகத்தை அகற்றுவார்கள். சிலர் உடலில் பொருத்தப்பட்ட அந்த உலோகத்தை வாழ்நாள் முழுவதும் வைத்திருக்க நேரிடுகிறது.
இதற்கான மாற்றாக, எலும்புகளை இயற்கையாக ஒட்ட வைக்கும் பசையை சீனாவின் ஜெஜியாங் மாகாண மருத்துவர்கள் உருவாக்கியுள்ளனர். கடல்சிப்பிகள் நீருக்கடியில் பாறைகளில் பலமாக ஒட்டிக்கொள்வதைக் கவனித்த பிறகே இந்த யோசனை தோன்றியதாக எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் லின் சியான்ஃபெங் தெரிவித்துள்ளார்.
இந்த பசை மூலம் உடைந்த எலும்புகளை மூன்று நிமிடங்களில் இணைக்க முடியும் என்றும், எலும்புகள் குணமடைந்த பின் பசை தானாகவே கரைந்து மறைந்து விடும் என்றும் அவர் கூறியுள்ளார். ‘Bone-02’ என பெயரிடப்பட்ட இந்த பசையின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு ஆகியவை ஆய்வக சோதனைகளில் உறுதிசெய்யப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 150 பேரில் இந்த பசை பரிசோதிக்கப்பட்டுள்ளது.
தற்போது சந்தையில் எலும்பு சிமெண்டுகள், void fillers போன்றவை கிடைத்தாலும், எலும்புகளை நேரடியாக ஒட்ட வைக்கும் பசையாக ‘Bone-02’ தான் முதன்முறையாக அறிமுகமாகிறது. இது உலகளவில் பரவலாக பயன்பாட்டிற்கு வந்தால், எலும்பு முறிவு சிகிச்சையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்றும், உலோக இம்ப்ளான்ட் தேவையே குறைந்து விடும் என்றும் நிபுணர்கள் நம்புகின்றனர்.