‘குடியேறிகளே வெளியேறுங்கள்’ – லண்டனில் 1.10 லட்சம் பேர் கலந்து கொண்ட பேரணி: பின்னணி விளக்கம்

பிரிட்டன் லண்டனில் கடந்த சனிக்கிழமை, தீவிர வலதுசாரி செயற்பாட்டாளர் டாமி ராபின்சன் தலைமையில் நடைபெற்ற “யுனைட் தி கிங்டம்” பேரணியில் சுமார் 1.10 லட்சம் மக்கள் பங்கேற்றனர். பேரணியின் போது சிலர் போலீஸாருடன் மோதலில் ஈடுபட்டனர்.

தேம்ஸ் நதிக்கரையில் பிக் பென் பகுதியிலிருந்து வாட்டர்லூ வரை நடைபெற்ற இந்த பேரணியில், வெளிநாடுகளில் இருந்து வரும் குடியேறிகள் தேசிய அடையாளத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதற்கு எதிராக, இனவெறி மற்றும் பாசிசத்துக்கு எதிரான அமைப்புகள் சுமார் 5,000 பேருடன் தனிப் பேரணியையும் நடத்தியன. இரு தரப்பினரையும் பிரிக்க போலீஸார் முயன்றபோது மோதல் ஏற்பட்டது. வலதுசாரி ஆதரவாளர்கள் போலீஸாரை நோக்கி பாட்டில்கள் எறிந்ததால், பாதுகாப்புக்காக 1,000க்கும் மேற்பட்ட போலீஸாருக்கு கவச உடைகள் வழங்கப்பட்டன. மோதல் சம்பவத்தில் 9 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை உறுதி செய்தது.

டாமி ராபின்சன், இஸ்லாமிய எதிர்ப்பு கருத்துகளை வலியுறுத்தும் “இங்கிலிஷ் டிபென்ஸ் லீக்” அமைப்பை நிறுவியவர். அவர் நீண்டகாலமாக குடியேற்றத்தை எதிர்த்து பிரசாரம் செய்து வருகிறார். இந்த பேரணியிலும் அதே கோஷமே முன்னிறுத்தப்பட்டது.

பிரான்சின் வலதுசாரி அரசியல்வாதி எரிக் ஜெம்மோர் கூடத்தில் பேசும்போது, “முன்னாள் காலனிகளிலிருந்து வரும் மக்களும், முஸ்லிம் கலாச்சாரமும் நமக்கு ஒரே மாதிரியான சவால்களை ஏற்படுத்துகின்றன” என்றார்.

இதற்கிடையில், எக்ஸ் (Twitter) உரிமையாளர் எலான் மஸ்க் தனது பதிவில், “பிரிட்டிஷ் அடையாளத்தில் தனித்துவம் இருக்கிறது. ஆனால் கட்டுப்படுத்த முடியாத குடியேற்றம் பிரிட்டனின் அழிவுக்குக் காரணமாகிறது” என குறிப்பிட்டார்.

சிறிய படகுகள் மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து குடியேறிகள் தொடர்ந்து பிரிட்டனுக்குள் நுழைவது, மேலும் அகதிகள் தங்க வைக்கப்பட்ட கட்டிடங்களின் அருகே உள்ளூர் மக்கள் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபடுவது ஆகியவற்றால், குடியேற்ற எதிர்ப்பு இயக்கம் பிரிட்டனில் தீவிரமாகி வருகிறது.

Facebook Comments Box