இடைக்கால அரசின் பரிந்துரையின்படி நேபாள நாடாளுமன்றம் கலைப்பு – 2026 மார்ச் மாதம் பொதுத் தேர்தல்
நேபாளத்தில் இடைக்கால அரசின் ஆலோசனையை ஏற்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாகவும், வரும் 2026 மார்ச் 5ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் எனவும் அதிபர் ராம் சந்திரா பவுதேல் அறிவித்துள்ளார்.
சமீபத்தில் நேபாள அரசியல் தலைவர்களின் பிள்ளைகள், தொழிலதிபர்கள் மற்றும் பணக்காரர்களின் வாரிசுகள் வெளிப்படையாக ஆடம்பர வாழ்க்கையை சமூக வலைதளங்களில் காட்சிப்படுத்தியதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்தனர். இதனை இளைஞர்கள் இணைய தளங்களில் தீவிரமாக விமர்சித்தனர்.
இதற்குப் பிறகு, நேபாள அரசு கடந்த 4ஆம் தேதி முழு நாட்டிலும் சமூக வலைதளங்களுக்குத் தடை விதித்தது. அதனால் கோபமடைந்த இளைஞர்கள் தலைநகர் காத்மாண்டுவில் நடத்திய ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியது. அப்போது 75 பேர் உயிரிழந்ததோடு, 1,300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாதுகாப்பை கையாளும் பொறுப்பு ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில், பிரதமர் சர்மா ஒலி மற்றும் பல அமைச்சர்கள் பதவி விலகினர். பின்னர் போராட்டக் குழுவினருடன் ராணுவத் தளபதி அசோக் சிக்டெல் நடத்தி வந்த பேச்சுவார்த்தையின் முடிவில், நேபாள உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி இடைக்கால பிரதமராக பொறுப்பேற்றார்.
இந்த சூழலில், அதிபர் ராம் சந்திரா பவுதேல் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், இடைக்கால அரசின் பரிந்துரையின் பேரில் நாடாளுமன்றம் செப்டம்பர் 12ஆம் தேதி முதல் கலைக்கப்பட்டதாகவும், 2026 மார்ச் 5ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
ஆனால், இந்த நடவடிக்கைக்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. “நாடாளுமன்ற கலைப்பு சட்டவிரோதம், ஜனநாயக விரோதம், அரசியலமைப்புக்கு முரணானது” என்று நேபாளி காங்கிரஸ், மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை கண்டனம் தெரிவித்துள்ளன.
இதே நேரத்தில், இடைக்கால பிரதமர் சுசீலா குறுகிய கேபினெட்டை அமைக்கத் திட்டமிட்டுள்ளார். உள்துறை, வெளியுறவு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளுடன், மொத்தம் 24 அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.