“ஊழலை முற்றிலும் ஒழிக்க பாடுபடுவேன்” – நேபாள இடைக்கால பிரதமர் சுசீலா கார்கி உறுதி
நேபாளத்தில் இடைக்கால பிரதமராக பொறுப்பேற்ற சுசீலா கார்கி, “ஊழலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்” என்ற போராட்டக்காரர்களின் கோரிக்கையை பின்பற்றுவேன் என உறுதியளித்தார்.
சமீபத்தில், ‘ஜென் ஸி’ இளைஞர்கள் நடத்திய தீவிர போராட்டங்களின் பின்னணியில் பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு பதவியில் இருந்து நீக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட அரசியல் கலக்கத்திற்குப் பிறகு, ஜென் ஸி தலைமுறையினரின் ஆதரவுடன் நேபாள உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி, செப்டம்பர் 12ஆம் தேதி இடைக்கால பிரதமராக பொறுப்பேற்றார்.
பொறுப்பேற்ற தினத்திலேயே, ஜென் ஸி போராட்டங்களில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்திய அவர், பின்னர் உரையாற்றியபோது கூறியதாவது:
- “ஜென் ஸி தலைமுறையின் சிந்தனைக்கு ஏற்ப நாம் செயல்பட வேண்டும்.
- அவர்கள் கோருவது ஊழல் ஒழிப்பு, நல்லாட்சி, பொருளாதார சமத்துவம். அதை அடைய நாம் உறுதியாக இருக்க வேண்டும்.
- இந்த பதவிக்கு நான் விருப்பத்துடன் வரவில்லை; மக்களின் விருப்பமே என்னை இங்கு கொண்டுவந்தது. அதிகாரத்தை அனுபவிக்கும் நோக்கம் எனக்கு இல்லை.
- எங்கள் இடைக்கால அரசு ஆறு மாதத்தைத் தாண்டாது. அந்த காலக்கட்டத்தில் தேவையான பொறுப்புகளை நிறைவேற்றி, பின்னர் அதை நாடாளுமன்றத்துக்கும் அமைச்சரவைக்கும் ஒப்படைப்போம்.”
கடந்த ஜென் ஸி போராட்டங்களில் 72 பேர் உயிரிழந்ததோடு, 191 பேர் காயமடைந்தனர். மேலும், உலக வங்கி தகவலின்படி நேபாளத்தில் 15 முதல் 24 வயதுக்குள் உள்ள இளைஞர்களில் சுமார் 20% பேர் வேலைவாய்ப்பு இன்றி உள்ளனர். அந்நாட்டின் தனிநபர் ஒருவரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP per capita) வெறும் 1,447 அமெரிக்க டாலர் மட்டுமே.