போரைக் கட்டுப்படுத்தும் பொருளாதார தடைகள் நிலைமையை சிக்கலாக்கும் – சீனா

மோதல்களை தீர்ப்பதற்காக அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்க சீனா உறுதிபூண்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்தார். மேலும், “போரால் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது; பொருளாதார தடைகள் நிலைமையை இன்னும் சிக்கலாக்கும்” என்றும் அவர் கூறினார்.

ஸ்லோவேனியாவின் துணைப் பிரதமர் மற்றும் வெளியுறவு, ஐரோப்பிய விவகார அமைச்சரான டான்ஜா ஃபாஜோனை சந்தித்த பிறகு, லுப்லியானாவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வாங் யி:

“சீனா போரில் நேரடியாக பங்கேற்கவோ, திட்டமிடவோ செய்யாது. அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஊக்குவித்து, பல்வேறு மோதல்களுக்கு அரசியல் தீர்வை பேச்சுவார்த்தை மூலம் உருவாக்க முயற்சிக்கிறது.

உலகில் பன்முகத்தன்மை மற்றும் பலதரப்பு வழிமுறைகளை வலுப்படுத்த வேண்டும். ஐ.நா. சாசனத்தின் கொள்கைகளை ஒருங்கிணைத்து பாதுகாக்க வேண்டும். தற்போதைய சூழலில், சர்வதேச நிலைமை குழப்பமானதும், தொடர்ச்சியான மோதல்களால் பாதிக்கப்பட்டதும் ஆகும்.

சீனா மற்றும் ஐரோப்பா போட்டியாளர்களாக அல்ல, நண்பர்களாக இருக்க வேண்டும். மோதுவதற்குப் பதிலாக ஒத்துழைக்க வேண்டும். ஒரு நூற்றாண்டில் மிகப்பெரிய மாற்றங்களுக்கிடையில் சரியான தேர்வுகளை மேற்கொள்வதும், இரு தரப்பினருக்குமான பொறுப்பாகும்” என்றார்.

முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சீனா மீது நேட்டோ நாடுகள் 50–100 சதவீத வரையிலான வரிகளை விதித்தால், ரஷ்யா–உக்ரைன் போருக்கு முடிவே வரும் என்று வலியுறுத்திய நிலையில், சீனா வெளியுறவு அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டார்.

Facebook Comments Box