காசாவில் இஸ்ரேல் நடத்தியது இனப்படுகொலை: ஐ.நா. விசாரணைக் குழு குற்றச்சாட்டு

காசா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்கள் இனப்படுகொலைக்கு சமமானவை என்றும், பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் உயர் அதிகாரிகளின் தூண்டுதலின் அடிப்படையிலேயே இவை நிகழ்ந்தன என்றும் ஐ.நா. விசாரணைக் குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 251 பேர் பிணைக்கைதிகளாக எடுக்கப்பட்டனர். இதற்குப் பிறகு ஹமாஸ் அமைப்பை அடக்க வேண்டும் என்ற பெயரில் இஸ்ரேல் காசா மீதான மிகப்பெரிய தாக்குதலைத் தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்றுவரும் இந்தப் போராட்டத்தில், கடந்த 22 மாதங்களில் 64,905 பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காசாவில் உணவுக்குறைவு மோசமடைந்துள்ளது. அங்கு ஐந்து வீடுகளில் ஒரு வீடு, மூன்று குழந்தைகளில் ஒருவருக்கு தினசரி பசியால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு 10,000 பேரில் இருவர் ஊட்டச்சத்து குறைவால் மரணம் அடைகின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், மனித உரிமை மீறல்களை ஆராய ஐ.நா. மனித உரிமை ஆணையம் மூன்று பேர் கொண்ட சுயாதீன விசாரணைக் குழுவை அமைத்தது. முன்னாள் ஐ.நா. மனித உரிமை ஆணையத் தலைவர் நவி பிள்ளை குழுத் தலைவராக இருந்தார். இக்குழு 72 பக்க அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

அந்த அறிக்கையில், சர்வதேச சட்டத்தில் வரையறுக்கப்பட்ட 5 இனப்படுகொலைச் செயல்களில் 4 காசாவில் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவை:

  • ஒரு சமூகக் குழுவினரை (ஹமாஸ் ஆதரவு பாலஸ்தீனர்கள்) கொல்வது,
  • உடல், மன ரீதியாக கடுமையான துன்பங்களை உண்டாக்குவது,
  • அந்தக் குழுவை அழிக்கும் நோக்கில் சூழ்நிலைகளை உருவாக்குவது,
  • பிறப்புகளைத் தடுக்க நடவடிக்கைகள் எடுப்பது.

இவை அனைத்தும் இஸ்ரேல் அதிகாரிகளின் அறிக்கைகள், ராணுவத்தின் நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டவர்களுடன் நடந்த பேட்டிகள், மருத்துவர்களின் சாட்சிகள், செயற்கைக்கோள் படங்கள் மற்றும் ஆவணங்களின் ஆய்வுகளின் அடிப்படையில் உறுதிசெய்யப்பட்டதாகவும் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த அறிக்கையை இஸ்ரேல் அரசு முற்றாக மறுத்துள்ளது. ஜெனிவாவில் உள்ள இஸ்ரேல் தூதர், “ஐ.நா. மனித உரிமை ஆணையம் அரசியல் நோக்கத்துடன் இஸ்ரேலுக்கு எதிராக செயல்படுகிறது. எனவே, இக்குழுவுக்கு எங்களின் ஒத்துழைப்பு இருக்காது” எனக் குறிப்பிட்டார்.

Facebook Comments Box