நேபாளத்தில் நடந்த கலந்துரையாடலில் ஒப்பந்தம்: இடைக்கால பிரதமராக சுசீலா பொறுப்பேற்பு
நேபாள நாட்டில் ‘ஜென் Z’ இளைஞர்கள் நடத்திய தீவிர போராட்டங்களால் பிரதமர் கே.பி. சர்மா ஒலி (73) தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு சாய்ந்தது. இதனால் அந்நாட்டில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், நாட்டின் இடைக்கால பிரதமராக யாரை நியமிப்பது என்பதைப் பற்றி தொடர் ஆலோசனைகள் நடைபெற்றன. நேபாள ராணுவத் தளபதி அஷோக் சிக்டெல், இதுகுறித்து ஆலோசனைகளை முன்னெடுத்து வந்தார்.
இதற்கிடையில், நேபாள இடைக்கால பிரதமராக நேபாள உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி பொறுப்பேற்க, போராட்டக்காரர்கள் ஒருமனதாக ஆதரவு தெரிவித்தனர். நாட்டின் இடைக்கால பிரதமராகப் பதவியேற்க அவர் சம்மதமும் தெரிவித்தார்.
ஆனால், நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டுமா என்பது தொடர்பாக கருத்து பிளவுகள் ஏற்பட்டதாக கூறப்பட்டது. அதனால் இடைக்கால அரசை அமைப்பதில் தாமதம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில், இடைக்கால பிரதமராக சுசீலா கார்கியை நியமிக்க நேபாள அதிபர் பவுடேல் நேற்று ஒப்புதல் அளித்தார். மேலும், நாடாளுமன்றத்தை கலைத்து நாட்டில் அவசரநிலையை அறிவிக்கவும் அவர் ஒப்புக்கொண்டார்.
காத்மாண்டுவிலுள்ள அதிபர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது, இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி நியமிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று இரவு 9 மணிக்கு இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி பொறுப்பேற்றார்.