அமெரிக்காவில் இந்திய வம்சாவளி உணவக மேலாளர் கொலை : மனைவி, மகன் கண் முன்னே நடந்த துயர சம்பவம்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் டல்லாஸ் நகரில் உள்ள ஓர் உணவகத்தில் மேலாளராக கர்நாடகாவை சேர்ந்த சந்திரமவுலி நாகமல்லையா (50) பணியாற்றி வந்தார். அவர் தனது மனைவி நிஷா மற்றும் 18 வயது மகன் கவுரவுடன் உணவகத்திலேயே வசித்து வந்தார்.
கடந்த புதன்கிழமை காலை உணவக ஊழியர் யோர்டானிஸ் கோபோஸ் மார்டினெஸ் (37) ஒரு அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, பழுதடைந்த வாஷிங் மெஷினை பயன்படுத்த வேண்டாம் என நாகமல்லையா கூறினார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கோபம் அடைந்த மார்டினெஸ், கத்தியால் நாகமல்லையாவை பலமுறை குத்தியுள்ளார்.
அவரை காப்பாற்ற முயன்ற மனைவியும் மகனையும் தள்ளி விட்டு, நாகமல்லையாவின் தலையை அறுத்து கொடூரமாகக் கொன்றார். பின்னர் துண்டிக்கப்பட்ட தலையை உதைத்தும், அதை குப்பைத்தொட்டியில் போட்டும் விட்டு அங்கிருந்து தப்பினார்.
தகவல் அறிந்த போலீஸார், இரத்தக் கறையுடன் இருந்த மார்டினெஸை கைது செய்தனர். விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். கியூபா நாட்டைச் சேர்ந்த இவர், முன்பே வாகன திருட்டு மற்றும் தாக்குதல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் என்றும், ஜாமீனில் விடுதலை செய்ய முடியாத பிரிவுகளின் கீழ் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்றும் டல்லாஸ் போலீஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அமெரிக்காவில் உள்ள இந்திய சமூகத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. நாகமல்லையாவின் மனைவி நிஷா, கல்லூரிப் படிப்பை தொடங்கவிருந்த மகன் கவுரவுக்காக நிதி திரட்ட, இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் GoFundMe பக்கத்தைத் தொடங்கினார். சில மணி நேரங்களுக்குள் 54,000 டாலருக்கும் மேல் நன்கொடை திரட்டப்பட்டது.
நாகமல்லையாவின் மரணத்தில் ஹூஸ்டன் இந்திய துணைத் தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும், குடும்பத்துடன் தொடர்பில் இருந்து தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாக தெரிவித்துள்ளது.