அமெரிக்காவில் இந்திய இளைஞர் கொலை
அமெரிக்காவின் சாண்டா கிளாரா பகுதியில் இந்திய இளைஞரை போலீஸார் சுட்டுக் கொன்றனர். மஹபூப்நகரைச் சேர்ந்த முகமது நிசாமுதீன் (32), 2016-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு சென்றார். புளோரிடாவில் உயர் கல்வி பயின்ற பின்னர், கலிபோர்னியா மாகாணம் சாண்டா கிளாரா பகுதியில் சாப்ட்வேர் இன்ஜினீயராக பணியாற்றினார்.
அங்கு வாடகை வீட்டில் நிசாமுதீனும் மற்றொரு நபரும் தங்கியிருந்தனர். கடந்த 3-ம் தேதி இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது நிசாமுதீன், சக நண்பரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த சாண்டா கிளாரா போலீஸார், முகமது நிசாமுதீனை துப்பாக்கியால் சுட்டனர். அவரது உடலில் 4 குண்டுகள் பாய்ந்தன. உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு உயிரிழந்தார்.
இதுகுறித்து நிசாமுதீனின் தந்தை ஹஸ்னுதீன் கூறியதாவது: “எனது மகனை எந்த விசாரணையும் செய்யாமல் போலீஸார் சுட்டுக் கொன்றனர். கடந்த இரண்டு வாரங்களாக அமெரிக்க போலீஸார் எங்களுக்கு எந்த தகவலையும் அளிக்கவில்லை. வெள்ளிக்கிழமை காலை மகன் உயிரிழந்தது தெரியவந்தது. உடலை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய வெளியுறவுத் துறையின் உதவியை நாடி உள்ளேன்”.
சாண்டா கிளாரா போலீஸ் கூறியது: “நிசாமுதீன் தனது சக நண்பரை கத்தியால் கொடூரமாக குத்தினார். அவரை தடுத்து நிறுத்தவே போலீஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டார். போலீஸ் தரப்பில் எந்த தவறும் இல்லை”.