‘அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம், உடனடியாக திரும்பிவரவும்’ – எச்-1பி விசா வைத்திருப்போருக்கு நிறுவனங்களின் எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், எச்-1பி விசா கட்டணத்தை 1 லட்சம் டாலராக உயர்த்தி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, மெட்டா, மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு அவசர அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளன.

அவற்றின் படி, அமெரிக்காவில் எச்-1பி விசா வைத்திருப்போர் குறைந்தது 14 நாட்களுக்கு நாட்டை விட்டு வெளியேறக் கூடாது. மேலும், அமெரிக்காவிற்கு வெளியே தங்கியிருக்கும் ஊழியர்கள் 24 மணி நேரத்திற்குள் திரும்பிவர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

எச்-1பி மற்றும் எச்-4 விசா வைத்திருப்பவர்கள், புதிய நடைமுறைகள் குறித்து தெளிவு கிடைக்கும் வரை குறைந்தது இரண்டு வாரங்களுக்கு அமெரிக்காவில் தங்கியே இருக்க வேண்டும் என்றும், வெளிநாடுகளில் உள்ள ஊழியர்கள் தங்கள் எதிர்காலம் பாதிக்கப்படாமல் இருக்க நிறுவன உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் என்றும் மின்னஞ்சல் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கட்டண உயர்வு:

முன்னதாக ரூ.1.32 லட்சமாக இருந்த எச்-1பி விசா கட்டணம் தற்போது 1 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.88 லட்சம்) ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்கா செல்லும் இந்திய தொழில்நுட்ப நிபுணர்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் நிலையில், 2020 முதல் 2023 வரை வழங்கப்பட்ட எச்-1பி விசாக்களில் 71% இந்தியர்களுக்கே வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளை மாளிகையின் நிலைப்பாடு:

வெள்ளை மாளிகை ஊழியர் செயலாளர் வில் ஷார்ஃப், “எச்-1பி விசா திட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்கர்களால் செய்ய முடியாத பணிகளுக்காக மட்டுமே இந்த விசா பயன்பட வேண்டும்” எனக் கூறினார்.

அதேபோல், வெள்ளை மாளிகை வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லுட்னிக், “இந்தக் கட்டண உயர்வு காரணமாக பெரிய டெக் நிறுவனங்கள் இனி வெளிநாட்டு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்காது. அவர்கள் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்களுக்கே முன்னுரிமை தருவார்கள். அமெரிக்கர்களின் வேலை வாய்ப்புகளை காக்க வெளிநாட்டு பணியாளர்களை குறைப்பதே எங்கள் கொள்கை” என்று தெரிவித்தார்.

Facebook Comments Box