ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புதிய எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் உள்ள பாக்ராம் விமான தள கட்டுப்பாட்டை மீண்டும் அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

2021-ஆம் ஆண்டு அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய பின், தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்தனர். அப்போது பெண்களின் கல்வி, சுதந்திரம் பேணப்படும் என்றும், உலக நாடுகளுடன் நல்லுறவு நிலைநிறுத்தப்படும் என்றும் உறுதியளித்தனர். ஆனால், நடைமுறையில் அதற்கு முரணான சட்டங்கள் அமல்படுத்தப்பட்டன.

இதற்கிடையே, அமெரிக்கா–தாலிபான் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகி, அதன் பேரில் அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறின. இந்நிலையில், ட்ரம்ப் எச்சரிக்கையில்,

“பாக்ராம் விமான தள கட்டுப்பாட்டை ஆப்கானிஸ்தான் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். அதைச் செய்யாவிட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும்” என்று தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப், மீண்டும் அந்த தளத்தில் அமெரிக்க படைகளை நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. காரணம், பாக்ராம் விமான தளம் சீன எல்லைக்கு அருகில் இருப்பதால், அமெரிக்காவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பாக்ராம் விமான தளத்தின் சிறப்புகள்:

  • அமெரிக்கா கட்டிய இந்த தளம், பல சர்வதேச விமான நிலையங்களை விட நீளமான ஓடுபாதைகளைக் கொண்டுள்ளது.
  • தங்குமிடங்கள், மருத்துவமனைகள், எரிபொருள் கிடங்குகள் உள்ளிட்ட பல வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
  • அமெரிக்கப் படையினருக்காக பர்கர் கிங், பிட்ஸா ஹட் போன்ற துரித உணவகங்கள், துணிக் கடைகள் கூட அமைக்கப்பட்டிருந்தன.

சீனாவுக்கு அருகாமையில் இருப்பதால், பாக்ராம் தளம் ஆசியாவில் அமெரிக்காவின் முக்கிய ராணுவ தளமாக பார்க்கப்படுகிறது.

Facebook Comments Box