அமெரிக்கர்கள் வேலை பறிபோவதை தடுக்கவே கட்டுப்பாடு: வெள்ளை மாளிகை அறிக்கை வெளியீடு

அமெரிக்கர்களின் வேலை பறிபோவதை தடுக்க அதிபர் ட்ரம்ப் எடுத்த நடவடிக்கை சரியானதுதான் என்று கூறி, ‘உண்மை அறிக்கை’ ஒன்றை வெள்ளை மாளிகை நேற்று வெளியிட்டது. அதில் கூறியதாவது: அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்குப் பதில் குறைந்த சம்பளத்தில் பணியாற்றக்கூடிய வெளிநாட்டினருக்கு வேலை வழங்கப்படுகிறது.

கடந்த 2003-ம் ஆண்டு எச்-1பி விசா பெறும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் எண்ணிக்கை 32 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் அமெரிக்கர்களிடையே வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினீயரிங், கணிதம் (ஸ்டெம்) ஆகிய 4 துறைகளில் வெளிநாட்டினரின் எண்ணிக்கை 2000-ம் ஆண்டில் இருந்து 2019-ம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

அமெரிக்க நிறுவனங்கள் எச்-1பி விசாக்களை பயன்படுத்தி, அமெரிக்கர்களுக்குப் பதில் வெளிநாட்டினரை பணியில் அமர்த்துகின்றன. ஒரு நிறுவனம் 2025-ம் ஆண்டு 5,189 எச்-1பி விசா பெற்றது. அதன்பின் 16,000 அமெரிக்க ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது. அதேபோல், 2025-ல் ஓரிகானில் உள்ள மற்றொரு நிறுவனத்திற்கு 1,698 எச்-1பி விசா வழங்கப்பட்டது. அந்த நிறுவனம் 2,400 அமெரிக்கர்களை ஜூலை மாதம் நீக்கியது.

மூன்றாவது நிறுவனம் கடந்த 2022-ம் ஆண்டு முதல் இதுவரை அமெரிக்க பணியாளர்களை 27,000 ஆக குறைத்து விட்டது. இந்த நிறுவனம் இதுவரை 25,075 எச்-1பி விசா பெற்றுள்ளது. இன்னொரு நிறுவனம் 1,000 அமெரிக்கர்களை பணி நீக்கம் செய்தது.

இந்த சூழ்நிலையில்தான் எச்-1பி விசாவுக்கு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டது. அமெரிக்கர்களுக்குதான் முதல் உரிமை. அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கு கிடைக்க வேண்டிய பணிகளை மீட்டு கொண்டு வருவதுதான் அதிபர் ட்ரம்ப்பின் நோக்கம். அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பதற்காகத் தான் அதிபர் ட்ரம்பை அமெரிக்கர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். அந்த வாக்குறுதியை நிறைவேற்றவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, அனைத்து வேலைவாய்ப்புக்கான பலன்களும் அமெரிக்காவில் பிறந்தவர்களுக்குதான் செல்கின்றன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Facebook Comments Box